search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறந்தாங்கி அருகே பெட்ரோல் பங்க் கண்ணாடியை உடைத்து ரூ.1½ லட்சம் கொள்ளை
    X

    அறந்தாங்கி அருகே பெட்ரோல் பங்க் கண்ணாடியை உடைத்து ரூ.1½ லட்சம் கொள்ளை

    அறந்தாங்கி அருகே இன்று பெட்ரோல் பங்க் கண்ணாடியை உடைத்து ரூ.1½ லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த பட்டுக்கோட்டை சாலையில் எருக்கனகோட்டை பகுதியில் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது.

    இங்கு நேற்று இரவு பணியில் சுவாதிராஜன், அருள், கார்த்தி ஆகியோர் இருந்தனர். நள்ளிரவில் அவர்கள் விற்பனை முடிந்ததும் விளக்குகளை அணைத்து விட்டு பங்க் அருகே உள்ள அறையில் தூங்க சென்றனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் பெட் ரோல் பங்கிற்கு வந்தனர். அவர்கள் கையில் இரும்பு பொருட்கள் வைத்திருந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் பங்கின் அலுவலக அறை கண்ணாடிகளை உடைத்தனர்.

    அருகில் இருந்த அறையில் தூங்கி கொண்டிருந்த ஊழியர்களுக்கு இது தெரியவில்லை. இதற்கிடையே அந்த மர்ம நபர்கள் அலுவலக அறைக்குள் புகுந்து அங்கு கல்லாவில் இருந்த விற்பனை பணம் ரூ.1½ லட்சம் மற்றும் கம்ப்யூட்டர் சி.பி.யு.வையும் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

    இன்று காலை ஊழியர்கள் எழுந்து பார்த்தபோதுதான் கொள்ளை நடந்திருப்பதை உணர்ந்தனர். பின்னர் இது குறித்து அவர்கள் அறந்தாங்கி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    மேலும் பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளனர். கைரேகை நிபுணர்களும் வந்து கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இதேபோல் அறந்தாங்கி அருகே ஆவணத்தான் கோட்டை கிராமத்தில் உச்சி மாகாளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. நள்ளிரவில் இந்த பகுதியில் மர்ம நபர் ஒருவரின் நடமாட்டம் இருப்பதை மக்கள் உணர்ந்தனர்.

    உடனே உஷாரடைந்த அவர்கள் திரண்டு சென்று பார்த்தனர். அப்போது அங்கு விழுப்புரம் மாவட்டம் அரசூரை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் நின்று கொண்டிருந்தார். அவரை விசாரித்தபோது மது போதையில் இருந்தார். மேலும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார்.

    அதே சமயம் கோவிலில் சென்று பார்த்தபோது அங்கு, உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உடனே இதுபற்றி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த அறந்தாங்கி போலீசார் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய வெங்கடேசனை கைது செய்தனர்.

    மேலும் அதே பகுதியில் நடந்த பெட்ரோல் பங்க் கொள்ளையிலும் வெங்கடேசனுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே பகுதியில் அடுத்தடுத்து நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×