search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு வீடாக  சென்று ஓட்டுக்கு பணம் கொடுக்க அதிமுகவினர் திட்டம்- வைகோ குற்றச்சாட்டு
    X

    வீடு வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுக்க அதிமுகவினர் திட்டம்- வைகோ குற்றச்சாட்டு

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவினர் வீடு வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளனர் என்று வைகோ குற்றம் சாட்டியுள்ளார். #vaiko #admk

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி எம்.பி.க்கு ஆதரவாக, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலையில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலானது ஜனநாயகத்துக்கும், பாசிசத்துக்கும் இடையே நடக்கிற யுத்தம் போன்றது. இங்கு அனைத்து மதத்தினரும் சகோதரர்களாக வாழ்ந்து வருகின்றனர். சைவமும், வைணவமும் இணைந்து தமிழை வளர்த்தது. தி.மு.க. எந்த சமயத்துக்கும் எதிரானது அல்ல. ஆனால் மத்திய பா.ஜனதா அரசு, மதம் என்ற பெயரில் பிற மதத்தினரை வாழ விடாமல் செய்வது நாட்டுக்கே பேராபத்தாக முடியும்.

    பொறியியல் படித்த பல லட்சம் மாணவர்கள் உரிய வேலை கிடைக்கப் பெறாமல் திண்டாடி வருகின்றனர். அவர்கள் குறைந்த சம்பளத்தில் ஏதேனும் வேலை செய்து பிழைக்கும் நிலை உள்ளது. கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்டினால், தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காது. இதனால் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்கப் பெறாமல் பாலைவனமாக மாறி விடும்.

    பின்னர் அந்த நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் குறைந்த விலைக்கு வாங்கி, நிலத்தடியில் உள்ள மீத்தேன், ஹைட்டோ கார்பன் போன்ற எரிவாயுக்களை எடுப்பார்கள். இதன் மூலம் 5 ஆண்டுகளிலே தமிழகம் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட எத்தியோப்பியா நாட்டைப் போன்று மாறி விடும். தமிழகத்துக்கு இதுபோன்ற பேராபத்து இதுவரையிலும் வந்தது கிடையாது.

    மத்திய பா.ஜனதா அரசு நீட் தேர்வை திணித்ததால், ஏழை மாணவர்களின் மருத்துவ கல்விக்கு கொள்ளி வைத்தனர். சமூக நீதி, இட ஒதுக்கீட்டால் வறுமையில் வாடிய ஏழைகளின் பிள்ளைகளும் உயர்கல்வி பெற்று, டாக்டர்களாகவும், என்ஜினீயர்களாகவும், கல்வியறிவு பெற்றவர்களாகவும் சமுதாயத்தில் தலைசிறந்து வாழ்கின்றனர். இதனை மத்திய பா.ஜனதா அரசு அழிக்க முயற்சிக்கிறது.

    தமிழக மக்களின் வாழ்வாதாரங்களை காக்க முயலாமல், மத்திய அரசுக்கு கைக்கூலியாக அ.தி.மு.க. அரசு உள்ளது. இந்த ஆண்டு ஆட்சி மாற்றங்களின் ஆண்டாக அமையும். பாசிச பா.ஜனதா ஆட்சியும், ஊழல் மிகுந்த அ.தி.மு.க. அரசும் அகற்றப்படும்.

    தேர்தலில் வீடு வீடாக பல ஆயிரம் ரூபாய் வழங்கி வெற்றி பெற்று விடலாம் என்று அ.தி.மு.க.வினர் கருதுகின்றனர். அவர்கள் நிச்சயம் ஏமாந்து போவார்கள். மக்கள் தங்களை விற்க தயாராக இல்லை. பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களை காக்க முயலாமல், அதில் தொடர்புடைய ஆளுங் கட்சியினரை காக்க அரசு முயலுகிறது. பெண்களின் உரிமைகளை காக்கவும், தமிழகத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், வேலையில்லா திண்டாட்டத்தை போக்கவும் கனிமொழி குரல் கொடுத்து உள்ளார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    Next Story
    ×