search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக வெற்றிக்கு பாமக உறுதுணையாக இருந்தது - அமைச்சர் சிவி சண்முகம்
    X

    இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக வெற்றிக்கு பாமக உறுதுணையாக இருந்தது - அமைச்சர் சிவி சண்முகம்

    கடந்த காலங்களில் அ.தி.மு.க. இக்கட்டான சூழ்நிலையில் இருந்த போது கட்சியின் வெற்றிக்கு பா.ம.க.உறுதுணையாக இருந்ததாக விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் நினைவு கூர்ந்தார்.
    விழுப்புரம்:

    தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் விழுப்புரம்(தனி), கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் விழுப்புரம் கரும்பு விவசாயிகள் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

    தமிழகம், புதுச்சேரி சேர்த்து 40 பாராளுமன்ற தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற போகிறோம். மீண்டும் நம்முடைய மோடி பிரதமராக வரப்போகிறார். கருத்துக்கணிப்பும் அப்படித்தான் சொல்கிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக தமிழக அரசு, அமைச்சரவை கூட்டத்தை நடத்தி கவர்னருக்கு ஒப்புதல் கடிதம் அனுப்பியுள்ளது. இந்த தேர்தலுக்கு பிறகு நிச்சயமாக 7 பேரும் விடுதலை ஆவார்கள் என்று நம்புகிறேன்.

    மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று கூறி வந்த தி.மு.க. ஆட்சி கட்டிலில் இருந்து பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் தமிழுக்கும் ஒன்றும் செய்யவில்லை, மாநில சுயாட்சியையும் பெற்றுத்தரவில்லை.

    இப்போது இந்த தேர்தலில் மாநிலத்தின் சுயாட்சியை பெற்றுத்தருவோம் என்று (அ.தி.மு.க., பா.ம.க.) நாங்கள் இருவரும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறோம். இந்த கூட்டணி அமைந்ததற்கு தம்பி சி.வி.சண்முகமும் காரணம். உள்ளாட்சி தேர்தல் ஜூன், ஜூலையில் வந்தே தீரும். அந்த தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறப்போவது உறுதி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

    ஜெயலலிதா இல்லாமல் நாம் சந்திக்கிற முதல் தேர்தல் இது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த இயக்கம் அழிந்து விடும், தலை தூக்க முடியாது என்று பேசியவர்கள் முகத்தில் கரியை பூசுகிற வகையில் இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும். தற்போது இந்த தேர்தலில் வெற்றிக்கூட்டணி அமைந்துள்ளது. இந்த தேர்தலுக்கு பிறகு மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும். நம்மை பார்த்து ஏளனம் பேசியவர்கள் இந்த தேர்தலுக்கு பிறகு அரசியல் செய்ய முடியாத நிலை உருவாகும். ஆகவே எந்த சுணக்கமும் இல்லாமல் அனைவரும் சுறுசுறுப்பாக பணியாற்றி 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற அயராது பாடுபட வேண்டும்.

    1996-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.தோல்வி அடைந்தது. அம்மாவும் தோல்வி அடைந்தார்.

    அ.தி.மு.க. இதோடு அழிந்து விட்டது என்று தீய சக்திகள் நினைத்து இருந்தார்கள். இந்த சூழ்நிலையில் 1998-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வோடு பா.ம.க.கூட்டணி அமைத்தது. இந்த தேர்தலில் அம்மா மாபெரும் வெற்றி பெற்றார்.

    2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வோடு கேப்டன் கூட்டணி அமைத்தார். அம்மா முதல்-அமைச்சர் ஆவதற்கு உறுதுணையாக இருந்தார்.

    தற்போது அ.தி.மு.க. இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. இந்தநிலையில் அ.தி.மு.க.வுக்கு பா.ம.க., தே.மு.தி.க., ஆதரவு தெரிவித்துள்ளது.

    இந்த தேர்தலில் இந்த கூட்டணி மாபெரும் வெற்றிபெறும்.

    இந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும். 5 ஆண்டு காலம் அ.தி.மு.க.ஆட்சியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×