search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இருநாட்டு மக்களும் திருப்பலிக்காக பெரிய சிலுவையை தூக்கி வந்த காட்சி.
    X
    இருநாட்டு மக்களும் திருப்பலிக்காக பெரிய சிலுவையை தூக்கி வந்த காட்சி.

    கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கோலாகலம்

    கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் இருநாட்டு மக்களும் திரளாக பங்கேற்றனர். #KatchatheevuFestival
    ராமேசுவரம்:

    இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் உள்ள கச்சத்தீவு, ராமேசுவரம் தீவில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 18 கடல் மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. இருநாட்டு மக்களும் திரளாக கலந்துகொள்ளும் இந்த திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் 2 நாள் மட்டும் நடைபெறும். கச்சதீவில் பல ஆண்டுகளாக ஓட்டு கொட்டகையாக காட்சியளித்து வந்த அந்தோணியார் ஆலயத்திற்கு பதிலாக இலங்கை அரசால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக ஆலயம் கட்டப்பட்டது.

    இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று (சனிக்கிழமை) வரை திருவிழா நடைபெறுகிறது. கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவிற்காக ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 6 மணி முதல் பக்தர்களுடன் ஒவ்வொரு படகாக புறப்பட்டு, கச்சத்தீவுக்கு சென்றது.

    ராமேசுவரத்தில் இருந்து 64 விசைப்படகுகள் மற்றும் 15 நாட்டுப்படகுகளில் 1,793 ஆண்கள், 369 பெண்கள், 43 ஆண் குழந்தைகள், 23 பெண் குழந்தைகள், ஒரு திருநங்கை என மொத்தம் 2,229 பேர் புறப்பட்டு சென்றனர்.

    கச்சத்தீவுக்கு சென்ற இந்திய-இலங்கையை சேர்ந்த இருநாட்டு மக்களையும் இலங்கை கடற்படையினர் தீவிரமாக சோதனை செய்த பின்பு தான் ஆலய வளாகத்தில் அனுமதித்தனர். அது போல் திருவிழாவில் நேற்று மாலை 5 மணிஅளவில் இருநாட்டு பங்கு தந்தை மற்றும் மக்கள் முன்னிலையில் நெடுந்தீவு பங்குத்தந்தை அந்தோணியாரின் திருஉருவம் பதித்த கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து மரத்தாலான பெரிய சிலுவையை இருநாட்டு மக்களும் சேர்ந்து தூக்கி வர, ஆலயத்தை சுற்றி 11 இடங்களில் சிலுவைப்பாதை திருப்பலி மற்றும் முதல்நாள் திருப்பலி நடைபெற்றது. அதன்பின் இரவு 8 மணிக்கு அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர் ஆலயத்தை வலம் வந்தபின், முதல் நாள் திருவிழா நிறைவடைந்தது.

    திருவிழாவின் 2-வது நாளான இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. இருநாட்டு மீனவர்களும் எந்த ஒரு பிரச்சினை இல்லாமல் மீன் பிடிக்கவும், அந்தோணியார் ஆலய திருவிழா இருநாட்டு அரசு மற்றும் மக்கள் பங்களிப்புடன் தொடர்ந்து நடைபெறவும், இருநாட்டு மக்களும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டியும் சிறப்பு திருப்பலி நடக்கிறது. 9 மணிக்கு திருவிழா திருப்பலி முடிந்த பின்பு கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவடைகிறது. #KatchatheevuFestival
    Next Story
    ×