search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல்காந்தியை விமர்சிக்க தமிழிசைக்கு தகுதி இல்லை - கே.எஸ்.அழகிரி
    X

    ராகுல்காந்தியை விமர்சிக்க தமிழிசைக்கு தகுதி இல்லை - கே.எஸ்.அழகிரி

    ராகுல்காந்தியை விமர்சிக்க தமிழிசைக்கு தகுதி இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கையில் தெரிவித்துள்ளார். #KSAzhagiri #RahulGandhi

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பங்கேற்போடு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைந்தது முதற்கொண்டு பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளிடையே மிகப்பெரிய கலக்கத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க.வினர் புலம்பிக் கொண்டிருப்பதை நம்மாலே புரிந்து கொள்ள முடிகிறது.

    மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எதிராக அமைந்துள்ள கூட்டணி நாம் அமைத்ததைப் போல கொள்கைக் கூட்டணி அல்ல. நமது கூட்டணியைப் பற்றி விமர்சனம் செய்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக கேள்விகளை தொடுத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க.வில் இணைந்த அவருக்கு அரசியல் வரலாற்றை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

    இலங்கை தமிழர் பிரச்சினையைப் பற்றி தமிழிசை நீலிக் கண்ணீர் வடிக்கிறார். இலங்கை தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி செயல்பட்டதை எவரும் மறந்திருக்க முடியாது. ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் தான் இன்றைக்கும் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருப்பதை தமிழிசையால் மறுக்க முடியுமா ?

    தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க ஒப்பந்தம் போட்ட காரணத்தினாலே இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் ராஜீவ்காந்தி பங்கரவாத அமைப்பால் படுகொலை செய்யப்பட்டார். இத்தகைய உயிர் தியாகத்தைச் செய்த காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கிற ராகுல்காந்தியை விமர்சிக்க தமிழிசைக்கு என்ன தகுதி இருக்கிறது ? இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்து அவர் முன்னிலையில் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடியின் துரோகத்தை தமிழக மக்கள் எவரும் மறக்க மாட்டார்கள்.

    1966-ம் ஆண்டில் தலைநகர் தில்லியில் காமராஜர் குடியிருந்த வீட்டின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சங்பரிவார் கும்பலின் வாரிசாக விளங்கி வருகிற பா.ஜ.க.வினர் அவரது பெயரை உச்சரிக்க கூட தகுதியற்றவர்கள். இவர்களுக்கு எங்களது தலைவர்கள் பெயரை குறிப்பிட்டு பேச என்ன உரிமை இருக்கிறது?

    தமிழகத்தில் தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 2004 பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றியைப் போல நாற்பதும் நமதே என்ற இலக்கை நோக்கி பயணித்து வருகிறது. தமிழகம் இந்தியாவுக்கு வழிகாட்ட போகிறது. இந்தியாவின் எதிர்கால பிரதமராக ராகுல்காந்தியும், தமிழகத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலினும் பதவியேற்கிற காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை தமிழிசை புரிந்து கொள்ள வேண்டும். ஆயிரம் தமிழிசைகள் ஒன்று சேர்ந்தாலும் எந்த சக்தியாலும் இதை தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #KSAzhagiri #RahulGandhi

    Next Story
    ×