search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலையான கெங்கை பாண்டி
    X
    கொலையான கெங்கை பாண்டி

    ஆலங்குளம் அருகே வாலிபர் கொலையில் கள்ளக்காதலி கைது

    நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலியை போலீசார் இன்று கைது செய்தனர்.
    ஆலங்குளம்:

    நெல்லையை அடுத்த புதூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கெங்கை பாண்டி (வயது 23). இவர் மாறாந்தை அருகே உள்ள சோலார் பவர் பிளாண்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்தவாரம் இவர் நெல்லையை அடுத்த வெள்ளாளங்குளம் அருகே மோட்டார்சைக்கிளில் வந்தபோது மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். கெங்கை பாண்டிக்கும், கொண்டாநகரத்தை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

    அவர்கள் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இதை அறிந்த கணேசன் இருவரையும் எச்சரித்துள்ளார். ஆனால் கள்ளக்காதல் ஜோடியினர் அதை மீறியும் பேசி பழகி உள்ளனர். இது கணேசனுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இதனால் கணேசன் கெங்கை பாண்டியை கொலை செய்ய திட்டமிட்டார். இதையடுத்து தனது மனைவி முப்பிடாதி மூலம் கெங்கைபாண்டிக்கு போனில் பேசி வரச்செய்தார். இதனால் நெல்லை நோக்கி வந்த கெங்கைபாண்டியை வெள்ளாளங்குளம் விலக்கு அருகே வைத்து கணேசன், முப்பிடாதி மற்றும் அவரது உறவினர் நெட்டூரை சேர்ந்த சுடலைமுத்து என்ற குமார், சக்தி ஆகிய 4 பேர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்தனர். இதுபற்றி ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலையாளிகளை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி கணேசன், சுடலைமுத்து என்ற குமார்(30) ஆகிய இருவரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். சக்தியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தார்கள். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முப்பிடாதியை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×