search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.50 லட்சம் பணத்தை எடுத்து சென்ற சாகுல் அமீதுவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது எடுத்த படம்.
    X
    ரூ.50 லட்சம் பணத்தை எடுத்து சென்ற சாகுல் அமீதுவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது எடுத்த படம்.

    தேர்தல் நடத்தை விதிகள் அமல்: வாகன சோதனையில் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.50 லட்சம் பறிமுதல்

    திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை வாகன சோதனையில் ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #LSPolls
    திருவாரூர்:

    தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதே தேதியில் திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது.

    தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நேற்று மாலை முதலே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.

    18 தொகுதி இடைத்தேர்தலில் குறிப்பாக திருவாரூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் அனைவரின் எதிர்பார்ப்பையும் ஈர்த்து வருகிறது. ஏனென்றால் மறைந்த தி.மு.க. தலைவர் சொந்த தொகுதியாகும். இந்த தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றார்.

    இதனால் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற தி.மு.க.- அ.தி.மு.க. கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் நேற்று மாலை முதல் அமுலுக்கு வந்ததால் புதுச்சேரி மாநில எல்லை பகுதியில் உள்ள விழுதியூரிலும், கந்தன்குடி, பேரளம் ஆகிய இடங்களிலும் மாவட்ட எல்லைகளான கானூர், கங்களாஞ்சேரி, சோளிங்கநல்லூர், வடுவூர் ஆகிய இடங்களிலும் நிலையான வாகன சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் 24 இடங்களில் வாகன சோதனை சாவடி அமைக்கப்பட்டு வாகனங்களில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்களை எடுத்து செல்வதை தடுக்க 24 மணி நேரமும் 200 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்ககள். மேலும் 12 பறக்கும் படை, 12 கண்காணிப்பு படை அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளில் சுமார் 6 ஆயிரம் பேர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட எல்லையான கானூர் பகுதியில் இன்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது காரில் இருந்த ஒரு பையை போலீசார் எடுத்து சோதனை செய்த போது, அதில் கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் ரூ.50 லட்சம் இருந்தது.

    பின்னர் காரில் வந்த வாலிபர் சாகுல் அமீதுவிடம் போலீசார் விசாரித்தனர். ரூ.50 லட்சத்துக்கு முறையான ஆவணங்கள் உள்ளதா? இந்த பணம் எங்கு கொண்டு செல்லப்படுகிறது? என்று விசாரித்தனர்.

    அப்போது அவர் பஸ் பாடி கட்டும் வேலைக்காக திருச்சிக்கு இந்த பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனால் ரூ.50 லட்சம் பணத்துக்குரிய கணக்குகள், முறையான ஆவணங்களை எதையும் அவர் காட்டாததால் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதை மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் ஆனந்துக்கு போலீசார் தெரியப்படுத்தினர்.

    நேற்று மாலை முதல் தான் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலையில் திருவாரூர் மாவட்டத்தில் வாகன சோதனையில் ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே தேர்தலை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் 400 ரவுடிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 100 பேர் நேற்று இரவோடு இரவாக அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 300 ரவுடிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. #LSPolls
    Next Story
    ×