search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    37 எம்.பி.க்கள் குறித்த பிரேமலதா கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது- எடப்பாடி பழனிசாமி பேட்டி
    X

    37 எம்.பி.க்கள் குறித்த பிரேமலதா கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது- எடப்பாடி பழனிசாமி பேட்டி

    அ.தி.மு.க.வின் 37 எம்.பி.க்கள் குறித்த பிரேமலதா கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #edappadipalanisamy #premalatha

    கோவை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வின் 37 எம்.பி.க்களால் பலனில்லை என்ற பிரேமலதா விஜயகாந்தின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. கூட்டணி கட்சியை சேர்ந்த பிரதமர் இல்லாததால், இவ்வளவு எம்.பி.க்கள் இருந்தும் ஒன்றும் செய்ய முடிய வில்லை என்று தான் தெரிவித்துள்ளார். அவர் சொன்னதன் கருவை புரிந்து கொள்ள வேண்டும்.

    தே.மு.தி.க.வுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் கூட்டணி உறுதி செய்யப்படும் என்று நம்புகிறோம். கூட்டணி அமைத்தால் ஒன்றிபோக வேண்டும். அப்போது தான் கூட்டணி வலுபெறும். கூட்டணி அமைத்தவர்களுடன் சேர்ந்து செயல்பட வேண்டும்.


    கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் தமிழக அரசை குறை கூறி தான் அரை சதவீத ஓட்டு வாங்குகின்றனர். கூட்டணி சேரவில்லை என்றால் கம்யூனிஸ்டு கட்சி காணாமல் போய்விடும். அவர்கள் கூறும் பொய்களை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    அரசு விழாக்களில் தேர்தல் பிரசாரம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகத்தான் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அது குற்றமா?. தற்போது எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணியை தொடங்கி வைத்து உள்ளார். இதனால் எதிர் கட்சிகளுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.

    தி.மு.க. மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த போது எத்தனை முறை பிரதமர் வந்து தமிழகத்தில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகள் வைப்பார்கள். அதுகுறித்து பொதுமக்களும், நீங்களும் சிந்திக்க வேண்டும்.

    தற்போதைய தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி சரியான கூட்டணியா? இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது யார் ஆட்சியில் இருந்தார்கள். அவர்களுடன் கூட்டணி வைத்திருப்பது வெட்கக் கேடான ஒன்று. பா.ஜனதா கட்சியை தி.மு.க. மதவாத கட்சி என்கிறார்கள். அவர்களுடன் மத்தியில் அங்கம் வகித்து 5 ஆண்டு ஆட்சி சுகத்தை அனுபவித்து விட்டு தற்போது மதவாத கட்சி என்று குறை கூறுவதை ஏற்க முடியாது. இதுகுறித்து நீங்கள் தான் அவர்களிடம் கேட்க வேண்டும்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார்கள். அவர்களை தி.மு.க. ஆட்சியில் பரோலில் விட்டார்களா? ஆனால் அவர்களின் உடல்நலன் கருதி உறவினர்கள் கேட்டுக்கொண்டதால் அ.தி.மு.க. ஆட்சியில் தான் பரோலில் விடுவிக்கப்பட்டனர்.

    7 பேர் விடுதலைக்காக தி.மு.க. எதையும் செய்யவில்லை. அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சில அமைப்புகள் வேண்டும் என்றே மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறார்கள். தேர்தலுக்காக இதுபோன்ற நாடகம் ஆடுகிறார்கள். உண்மையிலேயே அவர்கள் மீது பாசம் இருந்திருந்தால் தி.மு.க. ஆட்சியில் விடுதலை செய்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை. தற்போது 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி, அதை கவர்னரிடம் கொடுத்துள்ளோம். அவர் மத்திய அரசிடம் ஆலோசித்து உரிய முடிவை அறிவிப்பார். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×