search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவனந்தபுரம் அருகே கள்ளநோட்டு அச்சடித்த 4 பேர் கைது
    X

    திருவனந்தபுரம் அருகே கள்ளநோட்டு அச்சடித்த 4 பேர் கைது

    திருவனந்தபுரம் அருகே கள்ளநோட்டு அச்சடித்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாக்கடை பகுதியில் சமீபகாலமாக கள்ளநோட்டு புழக்கம் அதிகமாக உள்ளதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் சென்றது.

    இந்த நிலையில் காட்டுக்கடை பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சிகரட் வாங்கிவிட்டு 200 ரூபாய் நோட்டை ஒருவர் கொடுத்தார். அது கள்ளநோட்டாக இருக்கலாம் என்று கடைக்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவர் இதுபற்றி நெய்யாறு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அங்கு சென்று ரூபாய் நோட்டை கொடுத்தவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரது பெயர் ஷாஜகான் என்பது தெரியவந்தது. அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் கொடுத்த ரூபாய் நோட்டை சரிபார்த்த போது அது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஷாஜகானை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கள்ள நோட்டு அச்சடிப்பது தெரிய வந்தது. அந்த வீட்டிற்கு போலீசார் சென்று சோதனை நடத்தினார்கள் அங்கு 200 ரூபாய் மற்றும் 100 ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது தெரிய வந்தது.

    கள்ளநோட்டு அச்சடித்ததாக ஷெரிப் (42), ஹர்சாத் (27), மன்சிலின் (21) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த வீட்டில் இருந்து கள்ளநோட்டு அச்சடிக்கும் எந்திரம், அதற்கான காகிதம் மற்றும் பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த கும்பல் வாடகை வீட்டில் கள்ளநோட்டை அச்சடித்து அதை அந்த பகுதியில் உள்ள பெட்டிக் கடை மற்றும் சிறிய உணவு விடுதிகளில் புழக்கத்தில் விட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த கும்பலின் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×