search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம்-தினகரன் பேச்சு
    X

    பாராளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம்-தினகரன் பேச்சு

    பாராளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று கடலூரில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார். #dinakaran #parliamentelection

    கடலூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து மக்கள் சந்திப்பு பயணத்தை நடத்தி வருகிறார். நேற்று மாலை அவர் கடலூர் உழவர் சந்தை, ரெட்டிச்சாவடி, குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி போன்ற பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தார்.

    பொதுமக்கள் மத்தியில் திறந்த ஜீப்பில் நின்றபடி டி.டி.வி. தினகரன் பேசினார்.

    வருகிற ஏப்ரல் மாதம் இறுதியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிந்தவுடன் தமிழகத்தில் உள்ள 21 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிறது. பாராளுமன்ற தேர்தல் வர இருக்கும் சமயத்தில் இன்று கூட்டணி என்ற நாடகம் கடந்த ஒரு வாரமாக நடப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள்.

    தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை செலுத்துவதை விட எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் அமைச்சர் பொறுப்பை வாங்கி தங்கள் நிலையை பாதுகாத்து கொள்ள தங்களை பலப்படுத்திக் கொள்ள ஒரு கூட்டணியை அ.தி.மு.க. அமைத்து உள்ளது.

    தமிழகத்தை வஞ்சிக்கிற மத்திய பாரதீய ஜனதா கட்சியும், தமிழக மக்களால் வெறுக்கப்பட்டு உள்ள ஆளுங்கட்சியும், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு குற்றவாளி என்றும் தற்போது உயிரோடு இருந்திருந்தால் அவர் சிறைச்சாலையில் இருந்து இருப்பார் என்றும் தவறாக பேசியவர்களும் கூட்டணி வைத்துள்ளார்கள்.

    காவிரி டெல்டா பகுதியில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் மக்களை அச்சுறுத்தும் திட்டமான மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவைகளுக்கு அனுமதி தந்தது காங்கிரஸ் ஆட்சி. இதனை அனுமதித்தது தி.மு.க. ஆட்சி. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் இந்த திட்டத்துக்கு அனுமதி அளித்து தொடங்கி வைத்தார். ஆனால் ஜெயலலிதா இந்த திட்டத்தை வராமல் மக்கள் நலன் கருதி தடுத்தார்.

    ஆனால் ஜெயலலிதா பெயரை சொல்லி ஆட்சி நடத்துபவர்கள் மத்திய அரசுக்கு பணிந்து விட்டனர். தமிழகத்தில் பா.ஜ.க.வின் கிளை கட்சியாக அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது.

    தற்போது தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி 2 முறை வந்து விட்டார். ஆனால் கஜா புயல் தாக்கியபோது மக்கள் பாதிக்கப்பட்டபோது வராதவர்கள் தற்போது வாக்குகளுக்காக வருகிறார்கள். அவர்களை நீங்கள் முறியடிக்க வேண்டும்.

    ஜெயலலிதா இருக்கும்போது கடலூர் பாராளுமன்ற தொகுதி உள்பட 37 தொகுதியில் வேட்பாளர்களை வெற்றி பெற செய்தீர்கள். அதுபோல 95 சதவீதம் தொண்டர்களை வைத்திருக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. குக்கர் சின்னத்தில்தான் போட்டியிடும். எத்தனை சதி நடந்தாலும் உச்சநீதிமன்றம் சென்று இந்த சின்னத்தை பெறுவோம். இளைஞர்களும், மக்களும் எங்களுடன் இருப்பதால் வேறு கூட்டணி தேவையில்லை.

    வரும் தேர்தலில் பிரதமரை நிர்ணயம் செய்பவர்கள் தமிழக மக்களாகத் தான் இருப்பார்கள். அப்படியொரு வாய்ப்பினை அ.ம.மு.க.வினருக்கு பொதுமக்கள் வழங்க வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார். #dinakaran #parliamentelection

    Next Story
    ×