search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தே.மு.தி.க. எங்கள் கூட்டணியில் இணையும் - தமிழிசை சவுந்தரராஜன்
    X

    தே.மு.தி.க. எங்கள் கூட்டணியில் இணையும் - தமிழிசை சவுந்தரராஜன்

    தே.மு.தி.க. எங்கள் கூட்டணியில் இணையும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #TamilisaiSoundararajan #BJP #DMDK
    தூத்துக்குடி:

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி வருகிற 1-ந்தேதி வருகிறார். இதையொட்டி அங்கு நடந்து வரும் முன்னேற்பாடு பணிகளை பார்வையிடுவதற்காக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று தூத்துக்குடி வந்தார்.

    விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற 1-ந் தேதி கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகைக்கு கருப்பு கொடி காட்டுவேன் என்று வைகோ கூறியுள்ளார். கருப்பு கொடி வெத்து போராட்டமாக மாறி வருகிறது.

    வைகோவின் கருப்பு துண்டுக்கும் மரியாதை இல்லை. கருப்பு கொடிக்கும் மரியாதை இல்லை. அவர் கருத்துக்கும் மரியாதையும் இல்லை.

    தே.மு.தி.க. எங்களோடு நட்புறவோடு பேசிக் கொண்டிருக்கின்றனர். கூட்டணி அமைவது என்பது இரண்டாவது. அவர்கள் எங்களோடு நல்ல நட்புறவில் உள்ளனர். எங்கள் கூட்டணியில் டாக்டர் கிருஷ்ணசாமியும் இணைவார். அதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

    கிராம சபை கூட்டம் மூலம் ஸ்டாலின் புதியதாக மக்களை சந்தித்துவிட்டு ஒரு சுற்று சுற்றி வந்துவிட்டார். இப்போது அவருக்கு தெரிஞ்சிருக்கும் யார் ஆட்சிக்கு வருவார் என்று. நீங்கள் கிராம சபை கூட்டம் எப்படி கூட்டுகின்றீர்கள்? என்று மக்களுக்கும் தெரியும். மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்.

    பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த தொகுதிகளில் கூட்டணி கட்சி சார்பில் அ.தி.மு.க பேட்டியிடும். கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்பு கொடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக வந்த தகவல் குறித்து நிருபர்கள் கேட்டபோது ‘கட்சி எந்த தொகுதியில் நிற்க சொல்லுகின்றதோ அங்கு நிற்பேன்’ என்றார்.

    முன்னதாக தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேள்வி:- பாராளுமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நடிகர் விஷால் டுவிட்டரில் அழைப்பு விடுத்திருக்கிறாரே?

    பதில்:- நாங்கள் அரசியல் கட்சிகள் எல்லாம் இணைந்து கூட்டணி அமைத்து வெற்றிகரமாக தேர்தலை சந்திக்க இருக்கிறோம். நான் இந்த கருத்தைத்தான் சொல்ல முடியும்.

    அ.தி.மு.க.- பா.ஜனதா, பா.ம.க. மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நாங்கள் நினைக்கிறோம். அதனால் மாற்று ஏற்பாடு எதுவும் தமிழகத்தில் பலன் தராது என்பது எனது கருத்து.

    கே:- மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்திவிட்டு அந்த கூட்டம் முடிந்தவுடனே அடுத்து யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பது அவருக்கு தெரிந்து விட்டதாக சொல்கிறார்.

    ப:- நான் சொல்கிறேன், தமிழகத்தில் பா.ஜனதா - அ.தி.மு.க., பா.ம.க. கூட்டணி அமைந்த பிறகு ஏறக்குறைய 40 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற சூழல் உருவாகி உள்ளது. எதிர்க்கட்சி கூட்டணி தான் பலவீனமாக உள்ளது.

    கே:- ஐ.ஜே.கே., புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்காததால் ஆதங்கத்தில் உள்ளார்களே?

    ப:- தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை பல கட்சிகளுடன் நடத்தினோம். இதில் சில கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இன்னும் சில கட்சிகளுடன் உடன்பாடு ஏற்படவில்லை.

    வருங்காலத்தில் சில கட்சிகள் கூட்டணியில் இணைக்கப்படலாம். அதை எல்லாம் பிற்காலத்தில்தான் முடிவு செய்ய முடியும்.

    கே:- தே.மு.தி.க.வுக்கு உரிய மரியாதை கொடுக்கும் கூட்டணியில்தான் இடம் பெறுவோம் என்று பிரேமலதா கூறி இருக்கிறாரே? பா.ம.க.வுக்கு கொடுத்த மரியாதை தே.மு.தி.க.வுக்கு கொடுக்கப்படவில்லையா?

    ப:- நாங்கள் எல்லா கட்சிகளுக்கும் மரியாதை கொடுக்கத்தான் செய்கிறோம். எங்கள் கூட்டணியில் எண்ணிக்கை பெரிதல்ல. எண்ணம்தான் பெரிது என்று நினைக்கிறேன்.

    அதனால்தான் பா.ஜனதா தேசிய கட்சியாக இருந்தாலும் தமிழகக்தில் அ.தி.மு.க. கூட்டணிக்காக எண்ணிக்கையில் நாங்கள் அதிகமாக கவனம் செலுத்தவில்லை. தமிழகத்தில் நல்ல கூட்டணி அமைய வேண்டும். அதற்காக இந்த முறை ஒன்றிரண்டு இடங்களை விட்டுக் கொடுத்தாலும் பரவாயில்லை என்ற சூழ்நிலையை ஏற்படுத்தினோம்.

    அதனால் தே.மு.தி.க.வுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டிருக்கிறது. கூட்டணிக்கு அவர்கள் வந்தாலும் உரிய மரியாதை கொடுக்கப்படும் என்று எங்கள் கட்சித் தலைவர்கள் அத்தனை பேரும் சொல்லி உள்ளனர். மத்திய மந்திரி பியூஸ் கோயல் நேரிலும் இதை வலியுறுத்தி உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #BJP #DMDK
    Next Story
    ×