search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழி அருகே லாரிகளில் வந்த இரும்பு குழாய்களை இறக்க விவசாயிகள் எதிர்ப்பு
    X

    சீர்காழி அருகே லாரிகளில் வந்த இரும்பு குழாய்களை இறக்க விவசாயிகள் எதிர்ப்பு

    சீர்காழி அருகே கெயில் நிறுவனம் சார்பில் லாரிகளில் வந்த இரும்பு குழாய்களை இறக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழையபாளையம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் 20க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு எடுக்கப்படும் திரவ நிலையிலான எரிவாயு வர்த்தக நிறுவனங்களுக்கு கொண்டு செல்ல வேட்டங்குடி, எடமணல், திருநகரி ஊராட்சிகள் வழியாக தரங்கம்பாடி தாலுக்கா மேமாத்தூருக்கு 27 கிலோ மீட்டர் தொலைவுக்கு விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்கும் பணி கெயில் நிறுவனத்தால் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 

    வேம்படி கிராமத்தில் விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடந்தபோது விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் வேம்படி கிராமத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேட்டங்குடி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கெயில் நிறுவனம் சார்பில் லாரிகளில் கொண்டு வந்த 26 இரும்பு குழாய்களை 50-க்கும் மேற்பட்ட போலீசார் உதவியுடன் லாரியிலிருந்து இறக்கும் பணியில் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது வேட்டங்குடியைச் சேர்ந்த நஞ்சை, புஞ்சை விவசாயிகள் சங்கத்தலைவர் வில்வநாதன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அங்குதன் மற்றும் விவசாயிகள் சம்பவ இடத்திற்கு வந்து இரும்பு குழாய்களை இறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். 

    இதையடுத்து பேச்சு வார்த்தை நடத்தி பின்னர் இது குறித்து முடிவு செய்வதாக கூறி இரும்பு குழாய்கள் இறக்கப்படாமல் லாரிகளிலேயே வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×