search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆயிரம்விளக்கில் உள்ள பிஎஸ்என்எல் வளாகத்தில் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
    X
    ஆயிரம்விளக்கில் உள்ள பிஎஸ்என்எல் வளாகத்தில் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

    தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி- பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் வேலை நிறுத்தம்

    பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கண்டித்து அதிகாரிகள், ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். #BSNL
    சென்னை:

    மத்திய அரசின் நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களில் கிடைக்கின்ற வசதிகள் பி.எஸ்.என்.எல்.-ல் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கின்றனர்.

    நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் கட்டமைப்பு வசதிகள் கொண்ட இந்நிறுவனத்திற்கு இன்னும் 4ஜி அலைக்கற்றை ஒதுக்கப்படாததால் ஏராளமான வாடிக்கையாளர்கள் வேறு நெட் ஒர்க்கிற்கு மாறி செல்கின்றனர்.

    இந்த நிலையில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், மற்றும் ஊழியர்கள் அனைத்து தொழிற்சங்கங்கள் (ஏ.யூ. ஏ.பி.) சார்பாக நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம் தொடங்கியது.

    20-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கும் இந்த ஸ்டிரைக்கில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.

    நலிவடைந்துள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் அதிகாரிகள், ஊழியர்கள் என மொத்தம் 20 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். சென்னையில் மட்டும் 5 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். இதில் 1,800 பேர் அதிகாரிகள் ஆவார்கள்.

    ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சென்னையில் உள்ள பெரும்பாலான பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள் மூடப்பட்டன. ஒருசில இடங்களில் அதிகாரிகள், ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.

    சென்னையில் பி.எஸ்.என்.எல். சேவை மையங்கள் செயல்படவில்லை. இண்டர் நெட் இணைப்பு, ப்ரீ பெய்டு, போஸ்ட்பெய்டு புதிய இணைப்பு மற்றும் பில் தொகை வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.

    நெட்ஒர்க் பிரச்சனை எதுவும் ஏற்பட தற்போது வாய்ப்பு இல்லை. டெலிபோன் செயல்பாட்டிலும் எந்த இடையூறும் இருக்காது என்றாலும் டெலிபோன் இணைப்பில் பாதிப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்ய ஊழியர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

    வாடிக்கையாளர்கள் புகார் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுப்பதற்கு வாய்ப்பு இல்லை. மற்றபடி செல்போன், டெலி சேவையில் பாதிப்பு இருக்காது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    போராட்டம் குறித்து ஏ.யூ.ஏபி. தொழிற்சங்க தலைவர் சண்முகசுந்தர ராஜன் கூறியதாவது:-

    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை நலிவடைய செய்து அதனை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    அதற்காக மறைமுகமான வேலைகளை செய்து வருகிறது. பி.எஸ்.என்.எல். வளர்ச்சியை தடை செய்து அதனை முழுமையாக தனியாருக்கு கொடுப்பதே மத்திய அரசின் நோக்கமாக இருக்கிறது. 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யாமல் தாமதப்படுத்தி வருகிறது. தனியாருக்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யும் போது பி.எஸ்.என்.எல்.-க்கு ஏன் தாமதப்படுத்த வேண்டும்? இதன்மூலம் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் தனியாருக்கு மாறி செல்ல ஊக்குவிக்கிறார்கள்.

    பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடரும். இன்று அதிகாலையில் இருந்தே வேலைநிறுத்தம் தொடங்கி விட்டது. அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. சேவை மயங்களும் செயல்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #BSNL
    Next Story
    ×