search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 16 இடங்கள் எதிர்பார்க்கிறோம்- வசந்தகுமார் எம்எல்ஏ

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 16 இடங்களை எதிர்பார்ப்பதாக வசந்தகுமார் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். #Congress #DMK #Vasanthakumar
    நெல்லை:

    தமிழக காங்கிரஸ் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வசந்தகுமார் எம்.எல்.ஏ. இன்று நெல்லை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் காங்கிரசை வளர்க்கும் முயற்சியில் மாநிலத்தலைவர் அழகிரி உள்ளிட்ட அனைவரும் ஈடுபட்டுள்ளோம். இதையடுத்து வருகிற 19-ந் தேதி திருச்சியில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது, வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்துகிறோம். அதில் மாநில தலைவர் அழகிரி, மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

    தமிழக காங்கிரசில் அனைவரும் இணைந்து செயல்படுவோம். தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை இடம் என்பது குறித்து ராகுல்காந்தி முடிவு செய்வார். காங்கிரசுக்கு 16 தொகுதிகள் எதிர்பார்க்கிறோம். இதில் கூடுதலாகவும் கிடைக்கலாம். குறைவாகவும் கிடைக்கலாம். வெற்றி ஒன்றே எங்கள் குறிக்கோள்.

    நெல்லை, குமரி, விருதுநகர், திருச்சி, கோவை உள்ளிட்ட வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை எதிர்பார்க்கிறோம். கடந்த பாராளுமன்ற தேர்தலில் குமரி தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்றேன். இந்த முறை குமரி அல்லது நெல்லை தொகுதியில் போட்டிட விருப்பம் தெரிவித்துள்ளேன்.

    எங்களை பொறுத்தவரை ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். 100 சதவீதம் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை நிறுத்துவோம்.

    இலங்கை தமிழர்களுக்கு அதிக நன்மை செய்த கட்சி காங்கிரஸ். ஏற்கனவே இலங்கையில் போர் நடந்த போது உணவின்றி தவித்த தமிழர்களுக்கு விமானம் மூலம் உணவு அளித்தவர் ராஜீவ்காந்தி.

    தற்போது தமிழக அரசு ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அ.தி.மு.க.வினர் பட்டியலின்படியே வழங்கப்படுவதாக தகவல் வந்துள்ளது. இது தேர்தலுக்காக கொண்டு வரப்பட்ட திட்டம். இதில் கட்சிபாகுபாடின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும். மத சார்பின்மையை வலியுறுத்தியே காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோம்.

    காங்கிரஸ் ஆண்ட 10 ஆண்டுகளில் தீவிரவாதிகள் தாக்குதலால் 120 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் பா.ஜ.க.ஆளும் இந்த நான்கரை ஆண்டுகளில் 1800 ராணுவவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உளவுத்துறை எச்சரித்தும் மத்தியஅரசு கவனக்குறைவாக இருந்துள்ளது. இதன்மூலம் ஆட்சி நடத்த தகுதியற்ற கட்சியாக பா.ஜ.க. உள்ளது. இந்த சம்பவத்திற்கு மத்தியஅரசு தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோர் தமிழகம் வரஉள்ளனர். வாய்ப்பிருந்தால் சோனியா காந்தியும் பிரசாரத்தில் கலந்து கொள்வார். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 90 சதவீத வடஇந்தியர்கள் பணியில் உள்ளனர். இந்தநிலை மாறவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #DMK #Vasanthakumar
    Next Story
    ×