search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓசூர் அருகே பரோட்டா மாஸ்டர் கொலையில், மனைவியின் கள்ளக்காதலன் கைது
    X

    ஓசூர் அருகே பரோட்டா மாஸ்டர் கொலையில், மனைவியின் கள்ளக்காதலன் கைது

    ஓசூர் அருகே பரோட்டா மாஸ்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவியின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர்- சர்ஜாபுரம் ரோட்டில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் லே அவுட் பகுதி பக்கமுள்ள தோப்பில், எரித்துக்கொல்லப்பட்ட நிலையில், வாலிபர் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டதில் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் கிடந்த அந்த வாலிபர் கிருஷ்ணகிரி அருகே நாரலபள்ளி கிராமத்தை சேர்ந்த வரதராஜ் என்பவரது மகன் சுப்பிரமணி (வயது 35) என்பதும், இவர் பெங்களூர் அருகே பெல்லந்தூரில் ஒரு ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார் என்பதும் தெரிய வந்தது மேலும் இவருக்கு பாக்கியலட்சுமி (25) என்ற மனைவி உள்ளார்.

    இந்த நிலையில், சுப்பிரமணியை கொன்றது யார், எதற்காக கொல்லப்பட்டார் என்பது குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இதில், அவரது மனைவியின் திட்டப்படி, கள்ளக்காதலனே சுப்பிரமணியை கொன்றது தெரிய வந்தது. அதாவது, சுப்பிரமணி வேலை பார்த்து வந்த பெல்லந்தூர் பகுதியில் பானிப்பூரி கடை நடத்தி வருபவர் சரத்குமார் (27). இவர் கிருஷ்ணகிரி அருகே சின்னசக்கனூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் ஆவார். சரத்குமாருக்கு திருமணமாகி, மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், பெல்லந்தூரில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து அந்த பகுதியில் மனைவியுடன் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்த சுப்பிரமணிக்கும், பானிபூரி கடை நடத்தி வந்த சரத்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    அதனடிப்படையில், சரத்குமார் அடிக்கடி சுப்பிரமணி வீட்டிற்கு வந்து செல்வாராம். அப்போது, அவரது மனைவி பாக்கியலட்சுமிக்கும், சரத்குமாருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சுப்பிரமணி, மனைவியை கண்டித்து 3 மாதத்திற்கு முன்பு அவரது சொந்த ஊரான நாரலபள்ளிக்கு அழைத்துச்சென்று வீட்டில் விட்டு பெங்களூரு திரும்பினார். இந்நிலையில் பாக்கியலட்சுமியும், சரத்குமாரும் போன் மூலம் அடிக்கடி பேசி வந்தனர்.

    மேலும், தங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள சுப்பிரமணியை தீர்த்துக்கட்ட இருவரும் முடிவு செய்தனர். இதையடுத்து, கடந்த 10-ந் தேதி பாக்கியலட்சுமியை சந்திப்பதற்காக சரத்குமார் நாரலப்பள்ளி சென்றார். அப்போது பாக்கியலட்சுமி, தனது கணவர் மிகவும் டார்ச்சர் செய்வதாகவும், அவரை தீர்த்து கட்ட வேண்டும் என்றும் சரத்குமாரிடம் கூறியுள்ளார். பின்னர் பெங்களூரு திரும்பிய சரத்குமார், சுப்பிரமணிக்கு போன் செய்து, புதிய வியாபாரம் செய்வது தொடர்பாக பேசலாம் வா, என்று அவரை வரவழைத்து, தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, பாகலூர்-சர்ஜாபுரம் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில், பாட்டிலில் பெட்ரோல் வாங்கிக்கொண்டும், அதே பகுதியில் உள்ள மதுக்கடையில் மது வாங்கியும், அருகிலுள்ள ஒரு லே அவுட்டுக்கு சுப்பிரமணியை அழைத்து சென்றார். லே அவுட் அருகே ஒரு தோப்பில் இருவரும் மது அருந்தியபோது, அதிக போதையில் இருந்த சுப்பிரமணியை கீழே தள்ளி அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் போட்டார்.

    இதில், சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி இறந்தார். பின்னர், அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்தியும், சுப்பிரமணி கொலைக்கு பயன்படுத்திய கல்லை, அருகில் இருக்கும் ஏரியில் வீசியும் அங்கிருந்து சரத்குமார் தப்பி ஓடி விட்டார். இதையடுத்து, சர்ஜாபுரம் பகுதியில் தலைமறைவாக இருந்த சரத்குமாரை பாகலூர் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
    Next Story
    ×