search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் போனில் பேசி உறுதியளித்தால் போராட்டம் வாபஸ் குறித்து பரிசீலிப்போம் - நாராயணசாமி
    X

    கவர்னர் போனில் பேசி உறுதியளித்தால் போராட்டம் வாபஸ் குறித்து பரிசீலிப்போம் - நாராயணசாமி

    கவர்னர் கிரண்பேடி தொலைபேசியில் உறுதி அளித்தால் கூட எங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து பரிசீலிப்போம் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். #Narayanasamy #GovernorKiranbedi
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்ற நாள்முதல் தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்களை தடுத்து வருகிறார். முதியோர் பென்‌ஷன், இலவச அரிசி, விவசாயிகளுக்கான கடன் ரத்து என மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்.

    காங்கிரஸ் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கம். இதற்கு பிரதமர் மோடியும் ஆதரவாக உள்ளார்.



    புதுவையில் பிரதமர் மோடிக்கு ஒரு தம்பி உள்ளார். அவர்தான் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி. அவர் பொதுமக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்க முடியாததற்கு கூட குரல் கொடுக்காதவர்.

    பிரதமர் மோடி, கவர்னர் கிரண்பேடி, எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி ஆகியோர் சேர்ந்து கூட்டு சதி செய்கின்றனர். மாநில வளர்ச்சியும், மக்கள் நலனும்தான் எங்களுக்கு முக்கியம். இதற்காகத்தான் இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.

    3-வது நாளாக இந்த போராட்டம் தொடர்கிறது. ஒரு மணி நேரத்தில் முடிக்க வேண்டிய இந்த விவகாரத்தை வேண்டுமென்றே கிரண்பேடி தாமதப்படுத்துகிறார். எங்களின் போராட்டம் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் அறவழியில் தொடர்கிறது.

    பாப்ஸ்கோ, பாசிக் உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவன தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை, துறைகளுக்கான மானியம், மக்கள் நலத்திட்டங்களுக்காக இந்த போராட்டம் தொடர்கிறது.

    எங்களின் கூட்டணி கட்சிகள், ஆதரவு அமைப்புகள் ஆகியவற்றுடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கவர்னர் இங்கே வந்துதான் உறுதி சொல்ல வேண்டும் என்பது இல்லை. தொலைபேசியில் உறுதி அளித்தால் கூட எங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து பரிசீலிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Narayanasamy #GovernorKiranbedi
    Next Story
    ×