search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொளத்தூர் தொகுதியில் நவீன முறையில் மின் வடம் அமைக்க ஏற்பாடு- முக ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் பதில்
    X

    கொளத்தூர் தொகுதியில் நவீன முறையில் மின் வடம் அமைக்க ஏற்பாடு- முக ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் பதில்

    சாலையை தோண்டாமல் நவீன முறையில் கொளத்தூர் பகுதியில் முதன் முறையாக புதைவிட கம்பி அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். #TNAssembly #MKStalin #Thangamani
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் மின் கசிவு இல்லாத புதைவிட மின் கம்பிகளை அமைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பலமுறை இந்த சபையில் நான் வற்புறுத்தி இருக்கிறேன்.

    இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு விட்டதாக அமைச்சர் தெரிவித்தார். என்றாலும் இதுவரை அந்த பணிகள் நடைபெறவில்லை. புதைவிட கம்பிகளை அமைப்பதில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

    நான் சென்னை மேயராக இருந்தபோது பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்கும் குழுவை அமைத்து ஆலோசனை செய்து மாநகராட்சி பணிகளை முடித்தோம்.

    அதுபோன்று ஒரு குழுவை அமைத்து ஆலோசனை செய்து கொளத்தூர் பகுதியில் புதை வடம் அமைக்கும் பணியை விரைவில் முடிக்க அமைச்சர் ஏற்பாடு செய்வாரா? என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்து அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-

    சாலைகளை தோண்டி மின் கம்பி புதை வடங்களை புதைக்கும்போது பல்வேறு பிரச்சனைகள் வருகின்றன. ஒரு இடத்தில் தோண்டும் போது தொலைபேசி கம்பி சிறிதளவு பாதிக்கப்பட்டதற்கு அந்த துறையினர் ரூ.60 லட்சம் நஷ்டஈடு கேட்டனர்.

    இது போன்ற காரணங்களால் ஏற்கனவே விடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டு விட்டது. தற்போது சாலையை தோண்டாமல் நவீன முறையில் கொளத்தூர் பகுதியில் முதன் முறையாக புதைவிட கம்பி அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணி முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மற்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி, “சென்னையில் மொத்தம் 13 ஆயிரத்து 500 கி.மீ. தூரத்துக்கு பூமிக்கு அடியில் புதைவிட கம்பி அமைக்க வேண்டி உள்ளது. இதில் 6,500 கி.மீ. தூரத்துக்கு புதைவிட கம்பிகள் அமைக்கும் பணி முடிவடைந்து விட்டது. மற்ற பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

    தாம்பரம் பகுதியில் 1230 கி.மீ. தூரத்துக்கு புதைவிட கம்பி அமைக்க வேண்டி உள்ளது. இதற்காக 443 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் புதைவிட கம்பிகள் மூலம் மின் இணைப்பு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNAssembly #MKStalin #Thangamani
    Next Story
    ×