search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி வருகை திடீர் தள்ளிவைப்பு
    X

    குமரி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி வருகை திடீர் தள்ளிவைப்பு

    பிரதமர் நரேந்திர மோடி குமரி மாவட்டம் வருகை திடீரென்று தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 19-ந் தேதிக்கு பதில் மார்ச் 1-ந் தேதிக்கு பிரதமர் மோடியின் குமரி மாவட்ட சுற்றுப்பயணம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. #PMModi
    நாகர்கோவில்:

    பாராளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.

    தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாவிட்டாலும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தல் வியூகங்களை இப்போதே வகுத்து செயல்பட தொடங்கிவிட்டன.

    பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களை சந்தித்து வருகிறார். அதன்படி கடந்த 27-ந்தேதி நரேந்திர மோடி தமிழகம் வந்தார். மதுரையில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அவர் அடிக்கல் நாட்டி பேசினார்.

    அதன்பிறகு 2-வது கட்டமாக கடந்த 10-ந்தேதி திருப்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்து நலத்திட்டங்களை தொடங்கி வைத்ததுடன் தேர்தல் பிரசாரமும் மேற்கொண்டார்.

    3-வது கட்டமாக வருகிற 19-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி குமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரதமர் பங்கேற்கும் விழா நடத்துவதற்கான இடம் தேர்வு உள்பட அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

    கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பிரதமர் பங்கேற்கும் விழாவை நடத்த தீர்மானிக்கப்பட்டு மைதானத்தை சீரமைக்கும் பணிகளும் தொடங்கியது.

    இந்த மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிக்கப்பட்ட திட்டங்களை திறந்து வைத்தும் பிரதமர் நரேந்திர மோடி பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது.

    மேலும் அதே மைதானத்தில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால் அந்த மைதானத்தில் 2 விழாக்களுக்கும் தனித்தனியாக மேடை அமைக்க திட்டமிட்டு பணிகள் நடந்தது.

    ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் மைதானம் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. மத்திய மந்திரியும், கன்னியாகுமரி தொகுதி பாரதிய ஜனதா எம்.பி.யுமான பொன்.ராதாகிருஷ்ணன் அங்கு சென்று பணிகளை துரிதப்படுத்தினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி குமரி மாவட்டம் வருகை திடீரென்று தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    பிப்ரவரி 19-ந் தேதிக்கு பதில் மார்ச் 1-ந் தேதிக்கு பிரதமர் மோடியின் குமரி மாவட்ட சுற்றுப்பயணம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் அவர் குமரி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை இன்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் உறுதிப்படுத்தினார்.

    பாராளுமன்ற தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவித்த பிறகு பிரதமர் குமரி மாவட்டம் வருகை தந்தால் இங்கு நடைபெறும் பாரதிய ஜனதா கட்சி பொதுக் கூட்டத்தை பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டமாக நடத்தலாம் என்று திட்டமிட்டு உள்ளதால் பிரதமரின் குமரி வருகை தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. #PMModi
    Next Story
    ×