search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலவச அறிவிப்பால் மெட்ரோ ரெயிலில் 2 லட்சம் பேர் பயணம்- இன்றும் நீட்டிப்பு
    X

    இலவச அறிவிப்பால் மெட்ரோ ரெயிலில் 2 லட்சம் பேர் பயணம்- இன்றும் நீட்டிப்பு

    மெட்ரோ ரெயிலில் 2 லட்சத்து ஆயிரத்து 556 பேர் இலவசமாக பயணம் செய்துள்ளனர். இன்று இரவு வரை மெட்ரோ ரெயிலில் 2 வழித்தடத்திலும் இலவசமாக பயணம் செய்யலாம். #MetroTrain
    சென்னை:

    வண்ணாரப்பேட்டை- ஏ.ஜி.- டி.எம்.எஸ். இடையே புதிய பாதையில் மெட்ரோ ரெயில் சேவை நேற்று முன்தினம் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து வண்ணாரப்பேட்டை- விமான நிலையம்வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல்- பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் சேவை முழுமை அடைந்துள்ளது.

    இந்த 2 வழித்தடத்திலும் நேற்று இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டதால் அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    ஆனால் சைதாப்பேட்டை- சின்னமலை இடையே உயர் அழுத்த மின் கம்பியில் பழுது ஏற்பட்டதால் டி.எம்.எஸ்.- சின்னமலை இடையே சேவை தடைப்பட்டது. இதனால் இலவச பயணம் செய்ய ஆர்வமாக வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    6 மணி நேரத்திற்கு பிறகு பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. மெட்ரோ ரெயிலில் முழுமையாக பயணம் செய்யலாம் என்று எதிர்பார்த்து குடும்பத்துடன் வந்தவர்கள் ஒரு பகுதி சேவை முடங்கியதால் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.

    இதனால் பொதுமக்கள் வசதிக்காக இன்று மேலும் ஒரு நாள் இலவச சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு வரை மெட்ரோ ரெயிலில் 2 வழித்தடத்திலும் இலவசமாக பயணம் செய்யலாம்.

    ஆனாலும் நேற்று மெட்ரோ ரெயிலில் 2 லட்சத்து ஆயிரத்து 556 பேர் இலவசமாக பயணம் செய்துள்ளனர். புதிய சேவையை ஒவ்வொரு முறை தொடங்கும் போதும் இலவச பயண திட்டத்தை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்து வருகிறது. பொது மக்கள் மெட்ரோ ரெயிலை அதிகளவு பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

    மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு பஸ், மின்சார ரெயில், பறக்கும் ரெயில் பயணத்திற்கு இணைப்பு வசதியை அளித்து வருவதால் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது 55 ஆயிரம் பேர் தினமும் பயணம் செய்கிறார்கள். இந்த எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த மெட்ரோ நிர்வாகம் அடுத்த கட்ட முயற்சிகளை கையாண்டு வருகிறது. #MetroTrain
    Next Story
    ×