
கரூர்:
கேரள மாநிலம் எர்ணாக்குளத்தில் இருந்து புதுச்சேரி மாநிலம் காரைக்காலுக்கு கரூர், திருச்சி வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் தினமும் காலை 6.50 மணிக்கு கரூர் ரெயில் நிலையத்திற்கு வரும்.
இன்று காலை திருப்பூர் அருகே ரெயில் வந்து கொண்டிருந்த போது என்ஜினில் இருந்து 2-வதாக இணைக்கப்பட்டிருந்த முன்பதிவில்லாத பெட்டியின் கழிப்பறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. உள்ளே பயணி யாராவது இருக்கிறாரா? என்று மற்ற பயணிகள் கழிப்பறை கதவை தட்டி அழைத்தனர்.
ஆனால் உள்ளே இருந்து எந்தவித சத்தமும் வர வில்லை. கதவை உடைத்து பார்த்த போது , கழிப்பறையின் உள்ளே பயணி ஒருவர் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள், கரூர் ரெயில் நிலையம் வந்ததும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கரூர் ரெயில் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது 45 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் லுங்கியால் கழிப்பறையின் உள்ளே தூக்குப்போட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்த பயணி எந்த ஊரை சேர்ந்தவர், பெயர் விவரம்? குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்த பயணி, கழிப்பறையின் மேல் உள்ள கம்பியில் லுங்கியை கட்டி, அதன்பிறகு கழுத்தில் மாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் கால்கள், கழிப்பறையின் தரைத்தளத்தில் பட்டதால், காலை மடக்கி வைத்து தற்கொலை செய்துள்ளார். இதனால் அவர் கழிப்பறைக்குள் அமர்ந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.