search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய அ.தி.மு.க.வினர் திட்டம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு புகார்
    X

    மதுரையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய அ.தி.மு.க.வினர் திட்டம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு புகார்

    மதுரையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய அ.தி.மு.க.வினர் திட்டமிட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு புகார் தெரிவித்துள்ளது.

    மதுரை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க கட்சி நிர்வாகிகளை முடுக்கி விட்டு தேர்தல் பணிகளை செய்து வருகிறது.

    அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் முக்கிய கட்சிகள், நிர்வாகிகள் பொதுமக்களை சந்தித்து கட்சியின் திட்டங்கள், கொள்கைகளை விளக்கி ஆதரவு திரட்டி வருகிறார்கள். அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களும் நியமிக்கப்பட்டு தேர்தல் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மதுரை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி, மேலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் பணிகளில் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது.

    இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் கவுன்சிலர் திலகர், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சரவணன், மக்கள் நீதி மய்யம் கட்சி பிரமுகர் ஆசைத்தம்பி மற்றும் ம.தி.மு.க., ஜனதா தள கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேதி அறிவிப்புக்கு முன்பே ஆளும் அ.தி.மு.க. வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

    மதுரை மாநகர் பகுதியில் 100 வாக்காளர்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டு வாக்காளர்களின் செல்போன் எண் மற்றும் முகவரியுடன் நேரடியாக வாக்காளர்களை சந்தித்து விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.

    வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் நோக்கத்தில் இத்தகைய நடவடிக்கையை அ.தி.மு.க.வினர் மேற் கொண்டுள்ளனர். எனவே இதனை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே அரசியல் கட்சிகள் புகார் அளித்துள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×