search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் நகை கண்காட்சியில் 24 பவுன் தங்க நெக்லசை திருடிய கும்பல்
    X

    கோவையில் நகை கண்காட்சியில் 24 பவுன் தங்க நெக்லசை திருடிய கும்பல்

    கோவையில் நகை கண்காட்சியில் 24 பவுன் தங்க நெக்லசை திருடிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை அவினாசி சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் 3 நாட்கள் நகை கண்காட்சி கடந்த 1-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    இங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் பல்வேறு புதிய டிசைன்களில் விலை உயர்ந்த நகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமானோர் பார்வையிட்டு செல்கின்றனர்.

    நேற்று மாலை டிப்-டாப் உடையணிந்த 4 பெண்கள் உள்பட 6 பேர் கண்காட்சிக்கு வந்தனர். குறிப்பிட்ட ஒரு அரங்குக்கு சென்ற அவர்களில் 2 பெண்களும், 1 வாலிபரும் விற்பனையாளரிடம் நகைகளின் விலை குறித்து கேட்டுக்கொண்டே இருந்தனர்.

    அப்போது மற்றொரு பெண் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த 24 பவுன் எடை கொண்ட தங்க நெக்லசை நைசாக திருடினார். பின்னர் வந்து நகைகளை வாங்குவதாக கூறி விட்டு அவர்கள் அங்கிருந்து நைசாக சென்று விட்டனர். சிறிது நேரத்தில் நகை திருட்டு போனதை அறிந்த விற்பனையாளர் தனது நிறுவன மேலாளரிடம் கூறினார்.

    இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று கண்காட்சி அரங்கில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது 4 பெண்கள் உள்பட 6 பேரும் திட்டமிட்டு வந்து, விற்பனையாளரின் கவனத்தை திசை திருப்பிய காட்சிகளும், அவர்களில் ஒரு பெண் நைசாக தங்க நெக்லசை திருடியதும் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருட்டில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 6 பேரும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் போல காணப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். இவர்கள் ஒரு ஆட்டோவில் ஓட்டலுக்கு வந்துள்ளனர்.

    கண்காட்சி குறித்த தகவல்களை அறிந்து திட்டமிட்டு வந்து கைவரிசை காட்டி இருக்கிறார்கள். எனவே கோவையில் உள்ள லாட்ஜ்களில் தங்கி இருந்திருக்கலாம் என கருதிய போலீசார் பல்வேறு லாட்ஜ்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். கேமிராவில் காட்சிகள் மூலம் கிடைத்த திருடர்களின் புகைப்படத்தை வைத்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
    Next Story
    ×