search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்களால் தேர்ந்து எடுக்கப்படாத  எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியில் நீடிப்பதா?- உதயநிதி ஸ்டாலின் கேள்வி
    X

    மக்களால் தேர்ந்து எடுக்கப்படாத எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியில் நீடிப்பதா?- உதயநிதி ஸ்டாலின் கேள்வி

    மக்களால் தேர்ந்து எடுக்கப்படாத எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியில் நீடிப்பதா? என ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கேள்வியெழுப்பினார். #DMK #UdhayanidhiStalin
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பிச்சம் பட்டியில் தி.மு.க. சார்பில் ஊராட்சிசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:-

    ஆண்டிப்பட்டி பகுதியில் வாழும் நெசவாளர்களின் நலனுக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் 2011 -ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நெசவு பூங்காவை, அவர் வழியில் செயல்படுவதாக கூறும் இ.பி.எஸ். ஓ.பி.எஸ் செயல்படுத்தவில்லை. உங்களுக்கு நலத்திட்டங்கள் கிடைக்காததற்கு காரணம் மத்திய அரசுதான். மோடி பிரதமராக வந்த பின்னர் நாடு நாடாக சுற்றி வருகிறார்.

    மோடி ஆட்சிக்கு வந்தவுடன் அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக கூறிவிட்டு, தற்போது மக்களின் கணக்கில் இருந்த அனைத்து பணத்தையும் எடுத்து கொண்டார். அப்படிப்பட்ட பிரதமருக்கு ஜால்ரா அடிக்க தமிழ்நாட்டில் 2 பேர் உள்ளனர். ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது இதுவரையில் மர்மமாகவே உள்ளது. மக்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வரவேண்டும் என்றா ஓட்டு போட்டீர்கள். கலைஞர் அல்லது ஜெயலலிதா முதல்வராக வரவேண்டும் என்று நீங்கள் ஓட்டு போட்ட போது, எடப்பாடி பழனிசாமி முதல்வராக வந்தது எப்படி?.

    மக்கள் விரும்பாமல் முதல்-அமைச்சர் பதவியில் எடப்பாடி பழனிசாமி நீடிப்பது தமிழகத்தில் தான். அவர் தொடர்ந்து பதவியில் நீடிப்பது சரியல்ல. விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது தி.மு.க. ஆட்சியில் பொதுமக்களின் குறைகள் தீர்த்து வைக்கப்படும். கல்விக் கடனை ரத்து செய்வதோடு, டாஸ்மாக் கடைகள் மூடப்படும். குடி தண்ணீர் வசதி, சாலை வசதி, கழிப்பறை, கல்யாண மண்டபம் ஆகியவை கட்டிக் கொடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதன்பின்னர் திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டுவில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மக்களை சந்திக்க எனக்கு என்ன தகுதி இருக்கிறது? என அ.தி.மு.க., பா.ஜ.க. போன்ற கட்சியினர் கேட்கின்றனர். கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் என்ற தகுதியை விட தி.மு.க. தொண்டன் என்ற முறையில் தமிழக மக்களை சந்திக்க எனக்கு உரிமை உள்ளது.

    மக்களிடம் வாக்குறுதிகளை அளித்து விட்டு மட்டும் செல்வேன் என நினைக்க வேண்டாம். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மக்கள் அளித்த அத்தனை கோரிக்கையினையும் நிறைவேற்றுவேன். அதன் பின்னர் மீண்டும் மக்களை தைரியமாக சந்திப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தங்கள் பகுதியின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினர்.  #DMK #UdhayanidhiStalin
    Next Story
    ×