search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோழிங்கநல்லூரில் வாக்காளர்கள் அதிகமானது எப்படி?- தேர்தல் அதிகாரி விளக்கம்
    X

    சோழிங்கநல்லூரில் வாக்காளர்கள் அதிகமானது எப்படி?- தேர்தல் அதிகாரி விளக்கம்

    சோழிங்கநல்லூர் தொகுதியில் 10 ஆண்டில் 3 மடங்கு வாக்காளர்கள் அதிகமானது எப்படி? என்று தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். #finalvoterlist
    சென்னை:

    தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. இங்கு 6 லட்சத்து 18 ஆயிரத்து 695 வாக்காளர்கள் உள்ளனர்.

    இவர்களில் 3 லட்சத்து 11 ஆயிரத்து 102 பேர் ஆண்கள், 3 லட்சத்து 7 ஆயிரத்து 518 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 75 பேர்.

    தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 2 லட்சம் முதல் 3½ லட்சம் வரை வாக்காளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக பல்லாவரம், ஆவடி, மதுரவாயல், மாதவரம் போன்ற தொகுதிகளில் 4 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

    ஆனால் அதையும் தாண்டி சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 18 ஆயிரத்து 695 வாக்காளர்கள் உள்ளனர்.

    இந்த தொகுதியில் மட்டும் ஏன் இவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர்? இதை ஏன் 2 தொகுதியாக பிரிக்கக்கூடாது என்று தேர்தல் அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது.-

    சோழிங்கநல்லூர் தொகுதியில் கடந்த 2006-ம் ஆண்டு 2 லட்சம் வாக்காளர்கள் தான் இருந்தனர். 2011-ம் ஆண்டு வாக்காளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 45 ஆயிரமாக உயர்ந்தது.

    அதன்பிறகு கடந்த 9 ஆண்டுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்து விட்டது.

    இதற்கு முக்கிய காரணம் ஐ.டி. நிறுவனங்கள் ஏராளமாக உருவானதால் இங்கு பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. இவர்களுக்காக சோழிங்கநல்லூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிக அளவில் உருவாகி விட்டன.

    மக்கள் தொகை அதிகமானதால் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்களும், ஜவுளி கடைகளும் இப்பகுதியில் அதிகமாகி விட்டது.

    அதனால் தான் சோழிங்கநல்லூர் தொகுதி பரப்பளவில் சிறியதாக இருந்தாலும் மக்கள் தொகையில் அதிகமாக உள்ளது.

    இதை 2 தொகுதியாக பிரிக்க வேண்டும் என்றால் தொகுதி மறுசீரமைப்பு மூலம் தான் கொண்டு வர முடியும். அதற்கு தேர்தல் கமி‌ஷனும் அரசும் தான் சேர்ந்து முடிவு எடுக்க முடியும்.

    தமிழக சட்டசபையில் இப்போது 234 இடங்கள் உள்ளது. இந்த இடங்களை மேலும் அதிகரிக்க வேண்டுமானால் அதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தான் தேர்தல் கமி‌ஷன் மூலம் மாற்ற முடியும்.

    சோழிங்கநல்லூர் தொகுதியில் இன்னும் 5 ஆண்டுகளில் மக்கள் தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொகுதியை 2 ஆக பிரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #finalvoterlist
    Next Story
    ×