search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடுமலை தீபாலபட்டி பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் முகாமிட்டுள்ள சின்னதம்பி யானை.
    X
    உடுமலை தீபாலபட்டி பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் முகாமிட்டுள்ள சின்னதம்பி யானை.

    ‘சின்னதம்பி’ யானை உடுமலை பகுதியில் முகாம் - பொதுமக்கள் பீதி

    சின்னதம்பி யானை உடுமலை பகுதியில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். யானையால் பாதிப்பு ஏற்படாத வகையில் வனத்துறையினர் 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறார்கள். #ChinnathambiElephant
    பொள்ளாச்சி:

    கோவை கணுவாய் பகுதியில் ஊருக்குள் புகுந்து கடந்த 6 மாதங்களாக 2 காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. அதற்கு பொதுமக்கள் விநாயகன், சின்னதம்பி என்று பெயரிட்டனர்.

    வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை தொடர்ந்து நாசம் செய்ததால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. யானைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து விநாயகன் யானையை மயக்க ஊசி செலுத்தி முதுமலைக்கு கொண்டு சென்றனர். சின்னதம்பி தப்பியது. தப்பிய யானை மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டது.

    கடந்த 25-ந்தேதி மயக்க ஊசி செலுத்தி கும்கிகள் உதவியுடன் சின்னதம்பி யானையை லாரியில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு சென்றனர். யானையின் கழுத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டது. மயக்கம் தெளிந்த பின்னர் ஆனைமலை வரகளியாறு வனப்பகுதியில் விடப்பட்டது. ஜி.பி.எஸ். கருவி மூலம் அதன் நடமாட்டம், உடல் நலம் போன்றவை கண்காணிக்கப்பட்டது. அப்போது யானை வரகளியாறு பகுதியிலேயே சுற்றித்திரிந்தது.

    நேற்று முதல் சின்னதம்பி யானை மெதுவாக நடந்து அருகில் உள்ள ஆழியாறு அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிப்பட்டினம் என்ற ஊருக்குள் நுழைந்தது. யானை நேற்று அதிகாலை 1.30 மணிக்கு ஊருக்குள் நுழைவதை வனத்துறையினர் ஜி.பி.எஸ். மூலம் கண்டறிந்து பொதுமக்களை எச்சரித்தனர். இதனால் பீதியடைந்த பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கினர். இது குறித்து தெரியாத சிலர் அந்த வழியே வந்தபோது காட்டுயானை கம்பீரமாக நடந்து வருவதை பார்த்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    பொள்ளாச்சி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து 2 மணி நேரம் போராடி அங்குள்ள கோபால்சாமி மலைப்பகுதியில் யானையை விரட்டி விட்டனர்.

    வனத்துறையினர் அதே பகுதியில் முகாமிட்டு யானையை கண்காணித்தனர். இரவு 9 மணி முதல் நள்ளிரவு வரை அதே வனப்பகுதியில் இருந்தது. நள்ளிரவுக்கு பின்னர் மலையில் இருந்து இறங்கி விவசாய பயிர்கள் அதிகம் உள்ள பகுதிக்கு மெதுவாக யானை நடக்க ஆரம்பித்தது.

    யானை ஊருக்குள் நுழைந்ததை அறிந்த பொள்ளாச்சி வனத்துறையினர் உடுமலை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடுமலை வனத்துறையினரும் இணைந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். யானை எரிசனம்பட்டி பகுதி வரை நடந்து சென்றது. இன்று காலை 9 மணியளவில் உடுமலை தீபாலப்பட்டி தென்னந்தோப்பில் யானை முகாமிட்டு இருந்தது. நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை சுமார் 30 கி.மீ. தூரம் யானை பயணித்துள்ளது.

    அதன் போக்கிலேயே விட்டால் யானை திருப்பூர் நகர் பகுதி அல்லது பழனி ரோடு செல்ல அதிகம் வாய்ப்புள்ளது. இதனால் பொள்ளாச்சி மற்றும் உடுமலை வனத்துறையினர் தளி வனப்பகுதிக்குள் விரட்ட போராடி வருகிறார்கள். பொதுமக்களை வனத்துறையினர் எச்சரித்து வருகிறார்கள்.

    யானை அடிக்கடி ஊருக்குள் நுழைவது குறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் கூறும்போது, மனிதர்களை அடிக்கடி பார்த்து பழக்கப்பட்டதால் மீண்டும் மீண்டும் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்து விடுகிறது. வனப்பகுதியில் தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட நாட்கள் இருந்தால் யானை அதே பகுதியில் வசிக்க பழகிக்கொள்ளும்.

    ஆனைமலை, உடுமலை பகுதியில் ஊருக்குள் நுழைந்தபோதும் இதுவரை எதையும் சேதப்படுத்தவில்லை. யாரையும் தாக்கவில்லை. சாந்தமாகவே உள்ளது. அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க வனத்துறையினர் முன்எச்சரிக்கையுடன் யானையை வனப்பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றனர்.

    சின்னதம்பி யானை ஊருக்குள் நுழைந்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே யானையால் பாதிப்பு ஏற்படாத வகையில் வனத்துறையினர் 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    யானை நடமாட்டம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. மேலும் தனியாக வரும் யானையை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது. போட்டோ, ‘செல்பி’ எடுக்கக்கூடாது என்று வனத்துறையினர் கேட்டுக்கொண்டனர். #ChinnathambiElephant


    Next Story
    ×