search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லைக்கு திரும்பி வந்த நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி
    X
    நெல்லைக்கு திரும்பி வந்த நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி

    புத்துணர்வு முகாமில் உடற்பயிற்சி - 60 கிலோ எடை குறைந்து வந்த நெல்லையப்பர் கோவில் யானை

    புத்துணர்வு முகாம் முடிந்து நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி இன்று நெல்லைக்கு திரும்பி வந்தது. #RejuvenationCamp
    நெல்லை:

    தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் திருமடங்களை சேர்ந்த யானைகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் உள்ள பவானி ஆற்றுப் படுகையில் இந்த முகாம் கடந்த டிசம்பர் 14-ந்தேதி தொடங்கியது.

    வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே நடந்த இந்த முகாமில் தமிழகம் முழுவதிலும் இருந்து 28 யானைகள் பங்கேற்றன. யானைகள் புத்துணர்வு பெறும் வகையில் காலை, மாலை 2 வேளையும் நடைபயிற்சி, சவர் குளியலில் ஈடுபட்டன.

    யானைகளுக்கு சமச்சீர் உணவு, பசுந்தீவனங்கள் வழங்கப்பட்டு கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவ குழுவினர் 2 வேளையும் யானைளுக்கு மருத்துவ பரிசோதனை அளித்து வந்தனர்.

    48 நாட்கள் நடந்த இம்முகாம் நேற்று நிறைவடைந்தது. இதனையடுத்து யானைகள் அனைத்துக்கும் பழம், கரும்பு ஆகியவை வழங்கப்பட்டு அந்தந்த கோவில்களுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கண்ணீர் மல்க ஒவ்வொரு யானையும் பிரியாவிடை கொடுத்து சொந்த ஊருக்கு திரும்பின.

    நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி இன்று காலை நெல்லைக்கு வந்து சேர்ந்தது. நெல்லையப்பர் கோவில் வாசலில் காந்திமதி யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    காந்திமதி யானையுடன் பாகன்கள் ராம்தாஸ், விஜயகுமார், மகாராஜா ஆகி யோரும் முகாமுக்கு சென்று திரும்பி உள்ளனர். முகாம் குறித்து அவர்கள் கூறியதாவது:-

    புத்துணர்வு முகாமில் யானைகளுக்கு சத்து உருண்டை, வைட்டமின் மாத்திரைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன. நெல்லையப்பர் கோவில் யானை மற்ற யானைகளுடன் சேர்ந்து நன்றாக பழகி விளையாடியது. முக்கியமாக மயிலாடுதுறை கோவில் யானையான அவையம்மாளுடன் ஜோடி சேர்ந்து தினமும் வாக்கிங், சவர் குளியல் மேற்கொண்டது.

    யானை காந்திமதிக்கு தற்போது 46 வயதாகிறது. இதனால் மருத்துவர்கள் காந்திமதியின் உடல் எடையை குறைக்க பயிற்சி அளித்தனர். முகாமுக்கு போகும் முன் 4420 எடையுடன் இருந்த காந்திமதி, தற்போது 4360 கிலோவாக உள்ளது. மொத்தம் 60 கிலோ எடை குறைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு புத்துணர்வு முகாமில் யானைகளுக்கு மட்டும் இல்லாமல் பாகன்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் யானைகளை சிறப்பாக பராமரிக்க பயிற்சியும் வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #RejuvenationCamp




    Next Story
    ×