search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்னை மிரட்டி வாக்குமூலம் பெறப்பட்டது - பேராசிரியை நிர்மலாதேவி
    X

    என்னை மிரட்டி வாக்குமூலம் பெறப்பட்டது - பேராசிரியை நிர்மலாதேவி

    ‘என்னை மிரட்டி வாக்குமூலம் பெறப்பட்டது. பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி ஜாமீன் கிடைக்கவிடாமல் செய்கின்றனர்’ என்று பேராசிரியை நிர்மலாதேவி கூறினார். #NirmalaDevi
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக அந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் மதுரை பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை.



    இந்த நிலையில் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகிய 3 பேரும் மதுரை சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். 3 பேரும், நீதிபதி லியாகத் அலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். தற்போதும் வழக்கு விசாரணைக்கான ஆவணங்கள் வராததால், வழக்கு விசாரணையை வருகிற 14-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    இதற்கிடையே கோர்ட்டுக்கு ஆஜராக வந்த நிர்மலாதேவி நிருபர்களிடம் கூறும்போது “எனது ஒப்புதல் வாக்குமூலம் மிரட்டி பெறப்பட்டது. பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி ஜாமீன் கிடைக்கவிடாமல் செய்கின்றனர். மற்ற விவரங்களை எனது வக்கீல் கூறுவார்” என்று கூறிச் சென்றார்.

    இதைத்தொடர்ந்து நிர்மலாதேவி தரப்பு வக்கீல் பசும்பொன் பாண்டியன் கூறியதாவது:-

    கடந்த 10 மாதங்களாக நிர்மலாதேவி சிறையில் உள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு சிறையில் அவரை சந்தித்தேன். இந்த வழக்கு பாலியல் வழக்காக பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கில் பாலியல் மட்டும் அல்ல, மிகப் பெரிய அரசியல் பின்னணி உள்ளது.

    சிறைக்கு வரவழைத்து உறவினர்கள், நண்பர்களை பார்ப்பதற்கு அனுமதிக்குமாறு எழுதிக் கொடுத்தும், 10 மாதமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதில் சிறை விதி மீறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல நிர்மலாதேவியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சிறையில் மருத்துவர்கள்கூட முறையாக அவரை பரிசோதிப்பதில்லை. ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்படுகிறது. இதற்கு பின்னணியில் மிகப் பெரிய அரசியல் சதி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #NirmalaDevi
    Next Story
    ×