search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என் உயிர் இருக்கும் வரை மக்களுக்காக வாழ்வேன்- கமல்ஹாசன் பேச்சு
    X

    என் உயிர் இருக்கும் வரை மக்களுக்காக வாழ்வேன்- கமல்ஹாசன் பேச்சு

    விருத்தாசலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய கமல்ஹாசன், என் உயிர் இருக்கும் வரை மக்களுக்காக வாழ்வேன் என்றார். #KamalHaasan #makkalneethimaiyam

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    வாக்கு என்ற கூர்மையான ஆயுதத்தை சரியாகப் பயன்படுத்துங்கள். ஊழல் நிறைந்த சூழலை சுத்தப்படுத்துங்கள். அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். நாங்களும் வராவிட்டால் குப்பை கூடிவிடும். தெருவானது குப்பைத் தொட்டியாக மாறிவிடும்.

    நான் தாமதமாக வந்தாலும் என் உயிர் இருக்கும் வரை உங்களுக்காகவே வாழ்வேன். என் பணம் புகழ் அனைத்துக்கும் நீங்கள்தான் பங்காளிகள். உங்கள் பணத்தில்தான் கஜானா நிரம்புகிறது என்பதை மறவாதீர்கள். பெருமுதலாளிகள் கோடீஸ்வரர்கள் வரி கட்டுவது கிடையாது.

    அவர்கள் கஜானாவை காலி செய்வதும், அதை நீங்கள் நிரப்புவதுமாக உள்ளது. உங்களுக்கு மீன் குழம்பு வைத்து கொடுக்க நான் வரவில்லை. தூண்டில் வாங்கித் தரவே விரும்புகிறேன்.

    நான் தமிழகத்தை சொர்க்கமாக மாற்ற வழி தேடுகிறேன். இது நான் சாவதுக்கு முன் நடக்க வேண்டும்.

    பதவி நிரந்தரம் இல்லை. அதே போல உயிரும் நிரந்தரம் இல்லை. அனைவரும் ஓட்டு போட வேண்டும். இங்கு கூடியிருக்கும் கூட்டம் எனக்கான கூட்டம் என நம்புகிறேன். இந்த கூட்டம் தமிழகத்தை சீர்திருத்த போதாது. இன்னும் பெருமளவு கூட வேண்டும்.

    ஓட்டுக்காக பணம் வாங்காதீர்கள். நேர்மையாக இருந்தால் ஓட்டு போடுங்கள். உங்கள் உதவி இல்லாமல் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது.

    விருத்தாசலம் மணிமுத்தாற்றில் கழிவு நீர் சாக்கடை கலந்துள்ளது. நாம் சாப்பிடும் தட்டில் சாக்கடை உள்ளது. அதை சுத்தப்படுத்த அரசு தவறிவிட்டது. அதில் நமது தவறு உள்ளது. ஆறு ஓட வேண்டும். வாழ்க்கையும் அப்படித்தான். செய்யாமல் விட்டதை பட்டியலிட்டு செய்து விட்டாலே நாடு முன்னேறும்.

    ஆறும், நீரும் பெருக வேண்டும். தாகம், பஞ்சம் பெருகக்கூடாது. அதனால்தான் நாங்கள் வந்திருக்கிறோம். ஓட்டுக்கு கொடுக்கும் பணம் உங்கள் பணம். உங்கள் பையில் இருந்து எடுத்துதான் கொடுக்கிறார்கள்.

    நான் தமிழகம் முழுவதும் ‘சேஞ்ச்’ வேண்டும் என்று கூறினேன். ஆனால் அதனை சில்லறை என நினைத்து விடாதீர்கள். தலைவரை தேடாதீர்கள். நீங்கள்தான் தலைமை ஏற்க வேண்டும். மாற்றத்தை கொண்டுவரவேண்டும். மாற்றத்தை கொண்டு வருவது நான் என்பதை விட நாம் என்பதை நம்புங்கள்.

    மாற்றத்தை உரு வாக்க நினைக்கும் என் வாழ்க்கையை அர்த்தமுள்ள தாக்குங்கள். நான் சினிமாவில் சுமாராக நடிப்பேன். எனக்கு ஏதேனும் வேலை கிடைக்கும். ஆனால் நான் உங்களுக்காக வந்துள்ளேன். உங்கள் வாழ்க்கை நன்றாக அமைய என்னால் ஆனதை செய்கிறேன். நான் உயிரை தரவில்லை. உழைப்பையும், என் உணர்வையும், எனது நேர்மையையும் தருகிறேன். அதுவே எனது கடமை. உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். அனைவரும் வாக்களியுங்கள். உங்கள் பலத்தை காட்டுங்கள். அவ்வாறு செய்தால் எந்த கோட்டையிலும் ஏறிவிடலாம்.

    பிளாஸ்டிக்கை ஒழிக்க அரசு சட்டம் கொண்டு வந்தது. அதனை நாம்தான் செயல்படுத்தி உள்ளோம். அதனால் விழிப்புடன் இருங்கள். உங்களுக்கு பிடித்த கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள். நாங்கள் உங்களுக்கு பிடித்தது போல மாறுவது எங்களது கடமை ஆகும்.

    தமிழ் நாட்டில் முன்பு ஊழல் என்பது அதிக அளவுக்கு கிடையாது. வடமாநிலத்தவர்களை நாம் பார்த்து கேலி செய்தோம். ஆனால் இன்று பீகாரில் இருப்பவர்கள் நம்மை பார்த்து கேலி செய்கிறார்கள். அதனால் தமிழகத்தை மீண்டும் சொர்க்கமாக மாற்ற வேண்டும். உங்கள் நலன்தான் கொள்கை. அதனை கூறமுடியாது. செய்து காட்டினால்தான் புரியும். நம் கொள்கையை சொல்லுங்கள் எனக் கூறுகிறார்கள். சொல்லி விட்டால் காப்பி அடித்து விடுகிறார்கள்.

    கிராமசபை கூட்டம் தான் நம் பலம் என கூறினேன். ஆனால் அதனையும் காப்பி அடித்து விட்டார்கள். காப்பியடித்து என் வாலில் நெருப்பு வைக்காதீர்கள். அது உங்கள் கோட்டையை எரித்து விடும்.

    இவ்வாறு அவர் பேசினார். #KamalHaasan #makkalneethimaiyam 

    Next Story
    ×