search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தின் குரலை கேட்கும் ஆட்சி மத்தியில் உருவாக வேண்டும்- கனிமொழி பேச்சு
    X

    தமிழகத்தின் குரலை கேட்கும் ஆட்சி மத்தியில் உருவாக வேண்டும்- கனிமொழி பேச்சு

    டெல்லிக்கு நமது பிரச்சினைகள் எடுத்து சொல்ல தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்று கனிமொழி எம்பி பேசினார். #kanimozhi #dmk

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றியத்தில் பெரியதாழை, அழகப்பபுரம், மணிநகர், படுக்கப்பத்து ஆகிய கிராமங்களில் ‘மக்களை சந்திப்போம் குறைகளை கேட்போம்’ என்ற தலைப்பில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடைபெற்றன. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் ஜோசப், ஊராட்சி செயலாளர்கள் பெரியதாழை செல்வேந்திரன், அழகப்பபுரம் ஜெயராமன், பள்ளக்குறிச்சி பசுபதி, படுக்கப்பத்து இந்திரகாசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. மகளிரணி மாநில அமைப்பாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட திரளான கிராமத்தின் பெண்கள் சாலையோரம் மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    மேலும் சாத்தான்குளம் பகுதியின் வறட்சி தன்மை மாறிடவும், விவசாயம் செழித்திடவும், குடிநீர் கிடைத்திடவும் சடையனேரி கால்வாயில் மழை காலத்தில் தண்ணீர் தேங்கிட நிரந்தர கால்வாய் அமைக்க கோரியும், கன்னடியன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற கோரியும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் வக்கீல் வேணுகோபால், சுதாகர், ம.தி.மு.க. பிரமுகர் பலவேச பாண்டியன் உள்ளிட்டோர் எம்.பி.யிடம் வலியுறுத்தி பேசினார்கள்.

    கோரிக்கைகளையும், மனுக்களையும் பெற்றுக் கொண்ட கனிமொழி எம்.பி. கிராம மக்கள் மத்தியில் பேசியதாவது:-

    அரசின் திட்டங்கள் மக்களுக்கு போய் சேர வில்லை, வரவில்லை என்று சொன்னார்கள். இதுபோன்ற பல நலத்திட்ட உதவிகளை இந்த அரசு நிகழ்த்தியுள்ளது. அரசின் உதவித்தொகை கிடைக்காமல் பொதுமக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். நிச்சயமாக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வரும். அப்பொழுது நலத்திட்டங்கள் மக்களுக்கு போய்சேர நடவடிக்கை எடுக்கப்படும்.

    மத்தியில் உள்ள மோடி அரசு பெரிய தொழில் அதிபர்களுக்கு தான் ஆதரவாக உள்ளது. ஸ்டெர்லைட்டை நடத்திட மத்திய- மாநில அரசுகள் ஆதரவாக உள்ளது. மக்களுக்கு வேலை தரக் கூடிய அரசு மத்தியிலும், மாநிலத்திலும் இல்லை.

    தமிழக மக்கள் இந்த நிலைமையை மாற்ற வேண்டும். தோல்வி பயம் காரணமாக அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை. உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் மக்கள் பிரச்சினைகளை சொல்ல முடியாத நிலை தமிழகத்தில் உள்ளது. தி.மு.க.வில் பொறுப்பில் இருக்க கூடியவர்கள் ஊர் ஊராக சென்று மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை தெரிந்து கொண்டு நிறைவேற்றிட பாடுபட வேண்டும்.

    தமிழகத்தில் 21 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க போகிறது இதில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும். உங்கள் கோரிக்கைகள், பிரச்சினைகள் தீர வேண்டும் என்றால் நீங்கள் தேர்தலில் சரியாக ஓட்டு போட வேண்டும்.

    100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தி.மு.க. ஆட்சியில் வந்தது. இன்று இந்த திட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் சம்பளம் இல்லை. வேலையும் செய்யாமல் கிடப்பில் உள்ளது. இப்படிப்பட்டவர்கள் மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் எந்த உதவியும் கிடைக்காது. டெல்லிக்கு நமது பிரச்சினைகள் எடுத்து சொல்ல தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும். மத்தியில் தமிழ் நாட்டின் குரலை கேட்க கூடிய ஒரு ஆட்சி உருவாக வேண்டும்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.பி. ஜெயசீலன், முன்னாள் அமைச்சர் தமிழரசி, மாவட்ட மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர், பொதுக்குழு உறுப்பினர் சொர்ணகுமார், மாவட்ட அவைத் தலைவர் அருணாசலம், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுக பெருமாள், ஆழ்வை ஒன்றிய செயலாளர் பார்த்திபன், சாத்தான்குளம் ஒன்றிய துணை செயலாளர் பாலமுருகன், நகர செயலாளர் மகா இளங்கோ, ஒன்றிய பொருளாளர் வேல்துரை உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×