search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு ஊழியர்கள் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தூண்டி விடுகின்றனர் - அமைச்சர் செல்லூர் ராஜூ
    X

    அரசு ஊழியர்கள் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தூண்டி விடுகின்றனர் - அமைச்சர் செல்லூர் ராஜூ

    அரசு ஊழியர்கள் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தூண்டி விடுகின்றனர் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #SellurRaju #Jactogeo
    மதுரை:

    மொழிப்போர் தியாகிகளின் நினைவாக கடைபிடிக்கப்படும் வீர வணக்க நாள் முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ  மற்றும் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தலைமையில் வீரவணக்க நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ் மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் அ.தி.மு.க. சார்பில் தமிழனை சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்துள்ளோம்.

    ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதலமைச்சர் மிகத் தெளிவாக விளக்கம் அளித்திருக்கிறார், இடைநிலை ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு எந்த அளவிற்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார்.

    தற்போது தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ளது. எனவே கனிவோடு அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். எனவே ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். எதிர்க்கட்சிகள் ஜாக்டோ ஜியோ போராட்டத்தை தூண்டி விடுகின்றனர்.

    இந்தியாவில் எந்த மாநிலமும் பெறாத வகையில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீட்டில் 93 நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டு 68 நிறுவனங்கள் இன்று தொழில் தொடங்கியுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 3 ஆண்டு முதல் 7 ஆண்டு வரையில் செயல்படுத்தப்படும்.

    அந்த வகையில் எடப்பாடி தலைமையில் 2-வது முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. இது மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழ் இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக ஏறத்தாழ 10 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    இதை எதிர்க்கட்சிகள் பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் இந்த அரசையும், இந்த மாநாட்டையும் குறை சொல்லி வருகின்றனர். ஆனால் இளைஞர்கள் இதை வரவேற்று உள்ளன.

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அ.தி.மு.க. அரசை பாராட்டியுள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக தமிழ்நாடு உள்ளது என்று பாராட்டி உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., நிர்வாகிகள் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, திரவியம், எம்.எஸ். பாண்டியன், கிரம்மர் சுரேஷ், பரவை ராஜா, சோலைராஜா, கலைச் செல்வம், பிரிட்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர். #SellurRaju #Jactogeo

    Next Story
    ×