search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குக்கர் சின்னம் வழக்கு- சுப்ரீம் கோர்ட்டில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும்: டிடிவி தினகரன்
    X

    குக்கர் சின்னம் வழக்கு- சுப்ரீம் கோர்ட்டில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும்: டிடிவி தினகரன்

    குக்கர் சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் நீதிமன்றம் தங்களுக்கு நல்ல உத்தரவை தரும் என்ற நம்பிக்கை உள்ளது என்று டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran #SupremeCourt
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பதிவு செய்யப்படாத கட்சி. அதனால் அவர்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.

    ஏற்கனவே ஐகோர்ட்டில் சின்னமும், கட்சியையும் எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை சுப்ரீம்கோர்ட்டு கடந்த ஆண்டு மார்ச் 28-ந்தேதி தள்ளி வைத்து வழக்கை ஐகோர்ட்டு நடத்தட்டும் என்று கூறி வழக்கு நடந்து கொண்டிருப்பதால் எங்கள் கட்சியை நாங்கள் பதிவு செய்ய முடியவில்லை.

    தற்போது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. நீதிமன்றம் எங்களுக்கு நல்ல உத்தரவை தரும் என்ற நம்பிக்கை உள்ளது.

    தமிழகத்திற்கு தாமிர ஆலையே வேண்டாம் என்று சட்டமன்றத்தைக் கூட்டி கொள்கை முடிவு எடுத்து சட்டமாக இயற்றியிருந்தால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு வாய்ப்பு இருக்கும்.

    தூத்துக்குடியில் மக்கள் மீண்டும் கொந்தளிக்கும் நிலையில்தான் இருக்கிறார்கள். இதனை அரசாங்கம் எப்படி கையாள்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியில் பதவி கொடுத்ததால் வாரிசு அரசியல் என்று காங்கிரசுக்கு எதிர் நிலைப்பாட்டில் இருப்பதாக பா.ஜனதா சொல்கிறது. மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவிற்கு பிறகு தான் நாம் தெரிந்து கொள்ள முடியும். ஒரு கட்சியில் அப்பா இருக்கிறார் என்பதற்காகவே அவரது வாரிசுகள் அந்த கட்சிக்கு வரக்கூடாது என்று சொல்லக்கூடாது. தகுதி இருந்தால் யார் வேண்டுமானாலும் வரலாம். மக்கள் ஏற்றுக் கொண்டால் யார் வேண்டுமானாலும் அரசியலில் நிலைக்க முடியும். வாரிசு அரசியல் என்று வாதத்திற்கு வேண்டுமானால் சொல்லலாம்.

    போயஸ் கார்டன் வீடு எனக்கு தெரிந்து ஜெயலலிதாவின் பெயரில்தான் இருக்கிறது. அதனை யார் பெயருக்கு எழுதி வைத்துள்ளார் என்பது எனக்கு தெரியவில்லை. தெரியாத ஒன்றிக்கு பதில் சொல்ல முடியாது.

    தினகரன்-அ.தி.மு.க. இணைய வேண்டும் என்று மத்திய மந்திரி ராமதாஸ் அத்வாலே தனது விருப்பத்தை சொல்லியிருக்கிறார். அம்மாவின் மறைவிற்கு பிறகு போயஸ்கார்டனில் என்னையும், சசிகலாவையும் அவர் சந்தித்து விட்டு சென்றார்.

    நீங்கள் கூறுவது போல அ.தி.மு.க.வுடன் இணைய வேண்டும் என்று எனக்கோ, சசிகலாவுக்கோ, பா.ஜனதாவோ அல்லது வேறு யாரோ எந்தவித அழுத்தமும் தரவில்லை. பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. அதுதான் உண்மை.

    அ.தி.மு.க.வும், நாங்களும் ஒன்று சேர்வது என்பது நடக்காத வி‌ஷயம். அதனை ஏற்கனவே பலமுறை நான் கூறி விட்டேன். அதனால் இது சம்பந்தமாக திரும்ப திரும்ப கேட்டு மக்களை எரிச்சல் அடைய வைக்காதீர்கள்.

    தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நாங்கள் நியமித்துள்ளோம். தொகுதிக்கு குறைந்தது 3 ஆயிரம் பேரை நிர்வாகிகளாக நியமித்து விட்டு எப்படி அ.தி.மு.க.வுடன் நாங்கள் போய் சேர முடியும். எங்களின் தொண்டர்களை குழப்புவதற்காகத்தான் இணைப்பு என்று கிளப்பி விடுகிறார்கள்.

    வினய்குமார் அறிக்கையில் சசிகலாவுக்கு 4-5 அறைகள் ஒதுக்கி இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். பாதுகாப்பு கருதி சிறை நிர்வாகம் தனி பிளாக்கில் தான் சசிகலாவை தங்க வைத்து இருக்கிறார்கள். அதனால் சட்டப்படி அதனை எதிர்கொள்வோம். எங்களுக்கு மடியில் கனமில்லை, அதனால் எங்களுக்கு பயமில்லை.

    அதிகபட்சம் 45 நிமிடங்கள் தான் சசிகலாவை சந்திக்க அனுமதிப்பார்கள். அதற்கு மேல் பார்க்க விடுவதில்லை. மற்ற உறவினர்களையும் அதுபோலத்தான் பார்க்க அனுமதிக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #SupremeCourt
    Next Story
    ×