search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோந்து போலீசாருக்கு பயணப்படி எவ்வளவு?- 2 மாதத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க உள்துறை செயலாளருக்கு ஐகோர்ட் உத்தரவு
    X

    ரோந்து போலீசாருக்கு பயணப்படி எவ்வளவு?- 2 மாதத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க உள்துறை செயலாளருக்கு ஐகோர்ட் உத்தரவு

    ரோந்து செல்லும் காவலர்களுக்கு பயணப்படி வழங்குவது தொடர்பாக 2 மாதத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க உள்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #MaduraiHCBench
    மதுரை:

    ரோந்து பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு அதற்கான படி வழங்கப்படுவதில்லை என வந்த தகவலை, மதுரை ஐகோர்ட்டு தானாக முன்வந்து விசாரித்தது. இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு பதிவாளர் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.

    அதில், ரோந்துப் பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு அதற்கான படி வழங்கப்படுவதில்லை என செய்தி வெளியாகியுள்ளது.

    ஒவ்வொரு காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவர். அதற்காக அவர்கள் இரு சக்கர அல்லது 4 சக்கர வாகனங்களில் செல்வர்.

    அவ்வாறு பணி காரணமாக செல்லும் காவல்துறையினருக்கு போக்குவரத்திற்கான பெட்ரோல் படி வழங்கப்படுவதில்லை என தெரிய வருகிறது.

    இதற்காக அவர்கள் தங்களின் ஊதியத்தை செலவிடும் நிலை உள்ளது. காவல்துறையினர் லஞ்சம் பெறுவதாக புகார்கள் எழுவது அடிக்கடி நிகழும் சூழலில் இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இதனால் ரோந்து பணிகளில் ஈடுபடுவதை காவல்துறையினர் தவிர்க்கும் சூழலில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்.

    எனவே, ரோந்து பணிகளில் ஈடுபடும் காவல்துறையினருக்கு போக்குவரத்திற்கான படியை வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் கிராமப்புற, நகர்புறங்களுக்கு ரோந்து பணிகளுக்குச் செல்லும் காவலர்களுக்கு அவர்கள் ரோந்துப்பணி செல்லும் பகுதிகள், வாகனங்களின் எண்ணிக்கை, செலவாகும் எரிபொருள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பயணப் படி நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

    குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ரூ.1500 முதல் ரூ.2000 வரை பயணப்படியாக வழங்க வேண்டுமென நீதிமன்றம் கருதுகிறது. ஆகவே இதனை கருத்தில் கொண்டு, 2 மாதத்தில் உரிய உத்தரவை பிறப்பிக்க தமிழக உள்துறை செயலருக்கு உத்தரவிடுவதாக கூறி, வழக்கை முடித்து வைத்தனர். #MaduraiHCBench
    Next Story
    ×