search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமாவளவனின் பேச்சு ஒற்றுமையை உருக்குலைக்கும்- பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்
    X

    திருமாவளவனின் பேச்சு ஒற்றுமையை உருக்குலைக்கும்- பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்

    திருமாவளவனின் தேசம் காப்போம் மாநாடு மற்றும் அவரது பேச்சு குறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். #PonRadhakrishnan #Thirumavalavan
    சென்னை:

    திருமாவளவனின் தேசம் காப்போம் மாநாடு மற்றும் அவரது பேச்சு குறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் எத்தனையோ புகழ் பெற்ற அரசியல் தலைவர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த இரட்டைமலை சீனிவாசன், கக்கன்ஜி போன்ற தலைவர்களும் வாழ்ந்தார்கள்.

    அவர்களெல்லாம் ஒட்டு மொத்த சமுதாயத்துக்காக பாடுபட்டவர்கள். மக்களால் இன்றும் பாராட்டப்படுபவர்கள். செயற்கரிய செயல்களால் இன்றும் மக்கள் மனதில் வாழ்கிறார்கள்.

    எந்த தலைவரும், எந்த ஒரு சமூகங்களுக்கு இடையேயும் காழ்ப்புணர்ச்சியை உருவாக்கியதில்லை. இன்றும் பல்வேறு இந்து இயக்கங்களும் எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றுதான் முயற்சி எடுத்து பணிபுரிந்து வருகின்றன. ஒரு காலத்தில் இருந்த சூழ்நிலைகள் இன்று இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.

    ராமானுஜரை விட ஒரு சிறந்த சமூக சீர்திருத்தவாதி இருக்க முடியாது. அவரது குரு அவரை விட தாழ்ந்த சாதி. அவரை ராமானுஜரின் மனைவி உணவு கொடுத்து உபசரிக்காமல் அவமதித்து விட்டார். அந்த ஒரே காரணத்துக்காக கட்டிய மனைவி என்றும் பாராமல் அவரை துறந்தவர் ராமானுஜர். இந்த மாதிரி இந்தியாவில் எங்கும் நடந்தது இல்லை.

    எல்லா மக்கள் மீதும் பாசமும் பற்றும் கொண்டிருந்தவர். ஸ்ரீரங்கம் கோவிலில் அனைத்து சமுதாயத்தினரும் வழிபட பாடுபட்டதிலும் ராமனுஜருக்கு பெரும் பங்கு உண்டு.

    பல பெரியவர்கள், பல தலைவர்கள் அவரவர்களுக்கு தெரிந்த வழிகளில் சமூக பாகுபாடுகளை மாற்ற முயன்று இருக்கிறார்கள். அவர்கள் ஏற்படுத்திய தாக்கம்தான் சமூகத்தில் இவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

    தற்போது நடத்தப்படுவது போல் வெறுப்புணர்ச்சி அரசியல் அதிகப்பட அதிகப்பட சமூகத்தில் பிளவுகள் தான் அதிகமாகும். சமூக ஒற்றுமை எந்த காலத்திலும் வராது.

    எந்த மதத்திலும், எந்த இயக்கத்திலும், எந்த நாட்டிலும் நூற்றுக்கு நூறு நல்ல வி‌ஷயங்கள் மட்டுமே இருப்பதில்லை. இதை தெரிந்தவர்தான் சகோதரர் திருமாவளவனும். இதை அரசியல் ஆக்குவது ஒன்று பட்டு வரும் மக்களையும், சமூக ஒற்றுமையையும் உருக்குலைக்கும் செயலாக மாறி விடும் என்ற அச்சம் தோன்றுகிறது.

    பறவைகள் கூட எங்கள் சாதி என்றவர் பாரதி. அந்த மாதிரியான மனநிலை ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்க வேண்டும். என்னை விட தாழ்ந்தவர் என்று எவருமில்லை. என்னை விட உயர்ந்தவரும் எவருமில்லை என்ற மனநிலை வந்தால் மட்டுமே முன்னேற்றம் வரும்.

    அதற்கு அடிப்படை தேவை கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் முன்னேற்றம். இந்த மூன்றும் ஏற்பட்டால் எந்த பாகுபாடும் பார்க்க மாட்டார்கள். காமராஜரின் அமைச்சரவையில் கக்கன்ஜி எப்படிப்பட்ட அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்டிருந்தார்? அவரிடம் எவ்வளவு ஆளுமை இருந்தது? இன்றும் மக்களால் எந்த அளவு நேசிக்கப்படுகிறார் என்பது தெரியாதா?

    எனவே மக்களின் அடிப்படை தேவைகளான கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் முன்னேற்றத்துக்காக திருமாவளவன் போன்ற தலைவர்கள் செயல்பட்டால் அது தான் இந்த தேசத்தை காக்கும். மக்களை காக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan #Thirumavalavan
    Next Story
    ×