search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி ஆட்சியை அகற்ற மக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்- மு.க.ஸ்டாலின் பேச்சு
    X

    எடப்பாடி பழனிசாமி ஆட்சியை அகற்ற மக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்- மு.க.ஸ்டாலின் பேச்சு

    தி.மு.க. மீது நம்பிக்கை வைத்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியை அகற்ற மக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள் என்று கரூர் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். #mkstalin #edappadipalanisamy

    கரூர்:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அளவிலான தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வு கூட்டம் நொய்யலில் நடந்தது. திறந்த வெளி மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த இந்த கூட்டத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள 250 வாக்குச்சாவடிகளை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் முகவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசியதாவது:-

    இந்த வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்துவதன் நோக்கம் தமிழகத்தில் நடந்து வரும் எடப்பாடி பழனிசாமியின் கொடுமையான ஆட்சியையும், அதற்கு துணை போகும் மத்திய பாசிச ஆட்சியையும் அகற்ற வேண்டும் என்பது தான். அதற்கான வியூகத்தை தி.மு.க. அமைத்து விட்டது.

    மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனதை வெல்வோம் என்ற முழக்கத் தோடு நமது பயணத்தை தொடங்கி இருக்கிறோம். நம்முடைய இந்த பயணம் மத்திய, மாநில அரசுகளுக்கு ஒரு கிலியை, அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால்தான் அவர்கள் நம்மைப் பற்றி அதிகமாக விமர்சனம் செய்கிறார்கள்.

    நாம் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் நாம் ஆட்சிக்கு வரவேண்டும் என நாம் விரும்புவதை விட தமிழக மக்கள் அதிக ஆவலோடு தி.மு.க. மீது நம்பிக்கை வைத்து எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை வைத்திருக்கும் மக்களிடம் தேர்தல் நேரத்தில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதற்காகத்தான் இந்த கூட்டம்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் தான் இருக்கிறது. இந்த 5 மாத கால உழைப்பு, 5 ஆண்டு கால ஆட்சிக்கு அடித்தளமாக அமைய வேண்டும். 1967-ல் காங்கிரஸ் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தது. அப்போது தேர்தலில் தோல்வியை தழுவிய பெரியவர் பக்தவச்சலத்திடம் நிருபர்கள் கருத்து கேட்டபோது தமிழகத்தில் வி‌ஷக்கிருமிகள் பரவி விட்டது. அந்த கிருமிகளை எனது காலால் நசுக்கி அழித்து விடுவேன் என்றார். ஆனால் அவர்தான் அழிந்தாரே, ஒழிந்தாரே தவிர கழகத்தை அழிக்க முடிய வில்லை.

    அத்துடன் தி.மு.க.வின் வெற்றிக்கு காரணம் என்ன? என்று நிருபர்கள் கேட்டதற்கு பக்தவச்சலம், தி.மு.க.காரன் சிங்கிள் டீ குடித்து விட்டு வேலை பார்த்தான். அதனால் தான் வெற்றியடைந்து இருக்கிறார்கள் என்று கூறினார். அதுதான் தி.மு.க. தொண்டனின் உழைப்பு.

    அந்த உழைப்பை அடுத்த தேர்தலில் அது பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும், இடைத்தேர்தலாக இருந்தாலும், சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும், உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும் நீங்கள் காட்ட வேண்டும். நாம் வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வோடு முழங்கி கொண்டிருந்தால் மட்டும் போதாது. உழைப்பை செயலில் காட்ட வேண்டும்.

    மத்தியில் ஆளும் மோடிக்கு எதிர்ப்பு வலுத்துக் கொண்டிருக்கிறது. அண்மையில் நடந்த மத்திய பிரதேசம், திரிபுரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு என்ன நிலைமை ஏற்பட்டது என்பது உங்களுக்கு தெரியும். கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி கூட்டிய கூட்டத்தில் நான் கலந்து கொண்டபோது மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறார் என கேட்கிறார்கள். அவர்கள் தி.மு.க. ஆட்சிக்கு வருவதை அறிந்து, புரிந்து வைத்துக்கொண்டு இதை கேட்கிறார்கள்.

    ஆகவே நெல்மணியை வளர்க்க ஒரு விவசாயி எப்படி பாடுபடுகிறாரோ அதேபோன்று ஒவ்வொரு வாக்காளர்களையும் சந்தித்து தொடர்ந்து சந்திப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். அவர்களை தேர்தலின்போது தி.மு.க.வுக்கு வாக்களிக்க செய்வதை நமது கடமையாக கொள்ள வேண்டும் என நூறாயிரம் முறை உங்களை நினைவு படுத்துகிறேன்.

    ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன என்று நாம் இருக்க முடியாது. மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்கள் ஒரு வாக்குறுதியையாவது காப்பாற்றி இருக்கிறார்களா? சுவிஸ் வங்கியில் இருக்கும் கறுப்பு பணத்தை கொண்டு வந்து இந்திய மக்களின் ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சம் போடுவேன் என மோடி கூறினார். ரூ. 15 ஆவது போட்டார்களா?.

    தேர்தலில் வேட்பாளர் யார், கழக வேட்பாளரா, கூட்டணி வேட்பாளரா என்றெல்லாம் பார்க்க கூடாது. நமது வேட்பாளர் என நினைத்து அவர்களை வெற்றி பெற செய்வதற்கான பணியை இப்போதே தொடங்க வேண்டும். வெற்றிக்கு பாடுபடும் வாக்குச்சாவடி முகவர்களுக்கான மரியாதை உங்களை தேடி, நாடி உரிய நேரத்தில் வரும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    Next Story
    ×