search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்த ஆண்டு 17 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
    X

    இந்த ஆண்டு 17 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

    இந்த ஆண்டு 17 செயற்கைகோள்கள், 14 ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார். #ISRO #Sivan
    ஆலந்தூர்:

    இஸ்ரோ தலைவர் சிவன் சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    இஸ்ரோ சார்பில் பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி 8, 9-ம் வகுப்புக்கு செல்லும் மாணவர்களில் மாவட்டத்துக்கு தலா 3 பேர் தேர்வு செய்யப்பட்டு விண்வெளி பயிற்சி அளிக்கப்படும்.

    சிறிய ரக செயற்கை கோள்களை உருவாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்மூலம் விண்வெளி படிப்பில் மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படும்.

    பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் கடைசி பகுதியில் மாணவர்கள் உருவாக்கும் சிறிய ரக செயற்கைகோள்கள் பொருத்தி சோதனை செய்யப்படும்.

    பி.எஸ்.எல்.வி.சி-44 ராக்கெட் வருகிற 24-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ஆண்டு 17 செயற்கைகோள்கள், 14 ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படும்.

    சிறிய ரக செயற்கைகோளான எஸ்.எஸ்.எல்.வி. முதல் முறையாக இந்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்டு மாதம் ஏவப்படும்.

    அதேபோல விண்ணில் இருந்து பூமிக்கும், பூமியிலிருந்து விண்ணுக்கும் மறு சுழற்சி ராக்கெட் சோதனை செய்து பார்க்கப்படும்.

    ககன்யான் என்ற மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு விண்கலமும், 2021-ம் ஆண்டு ஜூலையில் ஒரு விண்கலமும், 2021-ம் ஆண்டு டிசம்பரில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டமும் செயல்படுத்தப்படும்.

    ஒரு பயணத்தில் 3 பேர் விண்வெளிக்கு செல்வார்கள். அங்கு அவர்கள் 7 நாட்கள் தங்கி இருப்பார்கள். இதற்காக தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அவர்களுக்கு 6 முதல் 12 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.

    சந்திராயன்-2 ஏவப்படுவதில் தாமதம் ஏற்படுவதற்கு காரணம், அதில் புதிய யுக்திகளை சேர்த்து நீண்ட காலம் செயல்படுவதற்கு பணிகள் நடக்கிறது. அதற்கு பல கட்ட சோதனை நடைபெறுவதால் தாமதம் ஆகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ISRO #Sivan

    Next Story
    ×