search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக பொதுக்குழு அடுத்த மாதம் கூடுகிறது
    X

    அதிமுக பொதுக்குழு அடுத்த மாதம் கூடுகிறது

    அதிமுக பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் கூடுகிறது. #ADMK

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து டி.டி.வி.தினகரன் பக்கம் சென்ற நிர்வாகிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் கணிசமாக உள்ளனர். இவர்களுக்கு பதில் அ.தி.மு.க.வில் புதிய நிர்வாகிகளை இன்னும் முழுமையாக நிரப்பாமல் உள்ளது.இதில் பொதுக்குழு உறுப்பினர்களும் அடங்கும்.

    இதனால் வருடத்துக்கு ஒரு முறை கூட்டப்பட வேண் டிய அ.தி.மு.க. பொதுக் குழு கூட்டம் கடந்த ஆண்டு கூட்டப்படவில்லை.

    தற்போது ஒவ்வொரு மாவட்டச்  செயலாளர்களிடமும் தினகரன் பக்கம் சென்ற பொதுக்குழு உறுப்பினர்களின் பெயர் பட்டியலை அ.தி.மு.க. தலைமை கேட்டு வாங்கி அந்த இடத்துக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறது.

    இதை நிறைவு செய்தால் தான் பொதுக்குழுவை கூட்ட முடியும் என்பதால் தேர்தல் கமி‌ஷனில் 2 மாதம் கால அவகாசம் கேட்டிருந்தனர்.

    தற்போது பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டியல் அ.தி.மு.க.வில் புதிதாக தயாரிக்கப்பட்டு வருவதால் அடுத்த மாதம் பொதுக்குழுவை கூட்ட முடிவெடுத்துள்ளனர்.

    இதில் புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கு பொதுக் குழுவில் ஒப்புதல் பெறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் இன்னும் 3 மாதத்தில் வர உள்ளதால் ஜெயலலிதா பாணியில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட வேண்டுமா? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டுமா? என்பதை பொதுக்குழுவில் கலந்து பேச உள்ளனர்.

    இதன் பிறகு கூட்டணி முடிவை அ.தி.மு.க. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். பொதுக்குழு கூடும் அன்றைய தினமே செயற் குழு கூட்டத்தையும் நடத்த ஏற்பாடு செய்து வருவதாகவும் தலைமை கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    பாரதிய ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர வேண்டுமா? வேண்டாமா? என்பதை இந்த கூட்டத்தில் முடிவு செய்து விடுவார்கள் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×