search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை- அதிகாரி பேட்டி
    X

    மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை- அதிகாரி பேட்டி

    மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர். #MetroTrain
    சென்னை:

    வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் மற்றும் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் ஆய்வு பணி இன்று முதல் 3 நாட்கள் நடைபெறும். சென்ட்ரல் நிலையம் வரை முதல் நாளும், சென்ட்ரலில் இருந்து டி.எம்.எஸ். வரை 2-வது நாளும் ஆய்வு நடக்கும்.

    இந்த ஆய்வின் போது பயணிகள் பாதுகாப்பு மற்றும் வசதிகள் குறித்து சாதனை செய்யப்படும். இதில் கண்டுபிடிக்கப்படும் குறைகளை தீர்க்க பரிந்துரைக்கப்படும்.

    அதை தொடர்ந்து வழங்கப்படும் அறிக்கைக்கு பிறகு புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும். எப்போதும் இயக்கப்படும் என்பதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.

    மெட்ரோ ரெயில் பயணத்தில் விபத்துகள் ஏற்பட்டதாக இதுவரை எந்த புகாரும் இல்லை. இது முழுக்க நவீன தொழில் நுட்பத்தில் செயல்படுத்தப்படுவதால் பெரிய அளவிலான விபத்துகள் நடந்தால் மட்டுமே தெரிய வரும்.

    மெட்ரோ ரெயில் சேவை தற்போது காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை உள்ளது. இதை இன்னும் அதிகரிப்பது குறித்து முடிவு செய்யப்படும். ரெயில் மற்றும் விமான சேவைகளை பொறுத்து முடிவு செய்யப்படும்.

    வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விரிவாக்கப் பணிகள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முடிவடையும். இத்திட்டம் 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 5 வருடங்களில் முடிக்க திட்டமிட்டிருந்தாலும், அதற்கு முன்பே நிறைவடைகிறது.

    மெட்ரோ முதற்கட்ட பணிகள் முற்றிலும் முடிவடைந்துள்ளது. இனி பயணிகள் எண்ணிக்கை இரு மடங்காக உயரும் என்று எதிர்பார்க்கிறோம்.

    தற்போது தினமும் 50 முதல் 60 ஆயிரம் பேர் பயணம் செய்கிறார்கள். 2-வது கட்ட திட்ட பணியான மாதவரம்-கோயம்பேடு, கோயம்பேடு-சோழிங்கநல்லூர் வரை நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான மண் பரிசோதனை, வரைபடம், நில ஆர்ஜிதம் போன்ற பணிகள் நடந்து வருகிறது.

    52 கி.மீட்டர் தூரமுள்ள இந்த பணிக்கு ஜூன் மாதம் டெண்டர் விடப்படும். மத்திய அரசுக்கு முதலில் அனுப்பிய திட்ட வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய கொள்கைப்படி மற்றொரு திட்ட வரைவு கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளித்ததும் திட்டம் தொடங்கும்.

    மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை. பயணிகளுக்கு வசதிகளை செய்து கொடுத்து அவர்களை கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். வீட்டில் இருந்து அலுவலகம் வரை சிரமமின்றி செல்லும் வகையில் இந்த சேவை அமையும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். #MetroTrain
    Next Story
    ×