search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊராட்சி சபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசிய காட்சி.
    X
    ஊராட்சி சபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசிய காட்சி.

    கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்- கனிமொழி

    பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிடுவது தொடர்பாக கட்சி தலைமை எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவேன் என்று கனிமொழி எம்.பி. கூறினார். #DMK #Kanimozhi
    தூத்துக்குடி:

    மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் கிராம ஊராட்சிகள்தோறும், ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாநில நிர்வாகி ஒருவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    தூத்துக்குடி மாவட்டத்துக்கு பொறுப்பாளராக கனிமொழி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். முதல் நிகழ்ச்சியாக அவர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தூத்துக்குடி அருகே உள்ள குறுக்குச்சாலையில் குளத்தூர் ரோட்டில் உள்ள மைதானத்தில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். 4 வழிச்சாலையில் மேம்பாலம் வேண்டும். குடிநீர் வசதி, பேருந்து வசதி வேண்டும். நூலகத்துக்கு புத்தகம் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். பின்னர் கனிமொழி எம்பி. பேசியதாவது:‍-

    அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியவில்லை. தேர்தல் நடத்தினால் வெற்றி பெற முடியாது என்பதாலேயே அ.தி.மு.க. அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.

    விரைவில் தி.மு.க. ஆட்சிக்கு வரும். இங்கே மக்கள் தெரிவித்த குறைகள் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தீர்க்கப்படும்.

    டாஸ்மாக் கடை இல்லாத தமிழகத்தை உருவாக்க முயற்சிகளை எடுப்போம். விரைவில் தேர்தல் வரும். பாராளுமன்ற தேர்தலும், சில நேரத்தில் சட்டமன்ற தேர்தலும் சேர்ந்து வந்தாலும் வரும். நமக்கு நல்லவழி கிடைப்பதற்கு அதுதான் வழியாக இருக்கும். தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வரும். மத்தியிலும் ஆட்சி மாற்றம் வரும். நீங்கள் வைத்து இருக்கும் அத்தனை கோரிக்கைகளையும் நிச்சயமாக விரைவில் நிறைவேற்றி தருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. நிருபர் களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேருவதற்கான அத்தனை வாய்ப்பும் இருக்கிறது. இதனால் தான் அ.தி.மு.க. முன்னேறியவர்களுக்கான 10 சதவீதம் இடஒதுக்கீட்டை எதிர்த்து வாக்களிக்கவில்லை. இது அவர்கள் கூட்டணியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமில்லை, தமிழ்நாடே இந்த ஆட்சி கலைய வேண்டும் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது.

    டாஸ்மாக் கடையை பொறுத்தவரை ஒரு கார்பரேட் நிறுவனம் போன்று அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் நான் தூத்துக்குடியில் போட்டியிடுவது தொடர்பாக தி.மு.க. தலைவரிடம்தான் கேட்க வேண்டும். கட்சியின் தலைவர் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கனிமொழி எம்.பி. இன்று கோவில்பட்டியில் நகர தி.மு.க. சார்பில் நடைபெற்ற பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

    மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிட உள்ளதாக தகவல் பரவிவரும் நிலையில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 12 நாட்கள் கனிமொழி முகாமிட்டு, மக்களை சந்திப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  #DMK #Kanimozhi
    Next Story
    ×