search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்துக்கோட்டை அருகே கலர் பிரிண்டர் மூலம் ரூ.2000 கள்ள நோட்டு அச்சடித்தவர் கைது
    X

    ஊத்துக்கோட்டை அருகே கலர் பிரிண்டர் மூலம் ரூ.2000 கள்ள நோட்டு அச்சடித்தவர் கைது

    ஊத்துக்கோட்டை அருகே கலர் பிரிண்டர் மூலம் ரூ.2000 கள்ள நோட்டு அச்சடித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    மராட்டிய மாநிலம் புனே நகர போலீசார் ரூ. 2 ஆயிரம், ரூ. 500 கள்ள நோட்டுகளை அச்சடித்த 4 பேரை புனேயில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1லட்சத்து 91 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்ட கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேரூராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகர் 4-வது தெருவை சேர்ந்த வெங்கடேசன் (வயது 44) பிரிண்டர் மூலம் கள்ள நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விடுவதாக தெரிவித்தனர்.

    அதன் பேரில் வெங்கடேசனை பிடிக்க புனே மாநகர போலீஸ் துணை சூப்பிரண்டு டெங்காலி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் பொன்னேரி வந்தனர்.

    ஆனால் கள்ள நோட்டு கும்பல் தெரிவித்த முகவரியில் உள்ள வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால் போலீசார் புனேயில் பிடிபட்ட கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த ஒருவனின் செல்போன் சிம்கார்டு மூலம் வெங்கடேசனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர்.

    அவர் போனை எடுக்க வில்லை. போன் டவரின் சிக்னல் ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெய்வேலி ஜடியல் சிட்டி பகுதியை காட்டியது. போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியதில் வெங்கடேசன் அங்குள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வருவதாக தகவல் கிடைத்தது.

    நேற்று அதிகாலையில் போலீசார் அந்த வீட்டிற்கு சென்று கதவை தட்டினர். கதவை திறந்து வெளியே வந்த வெங்கடேசன் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    அவரது வீட்டில் இருந்த கள்ள நோட்டுகள் அடிக்க பயன்படுத்திய கலர் பிரிண்டர் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ. 2 லட்சத்து 14 ஆயிரம் மதிப்புள்ள ரூ. 2 ஆயிரம் மற்றும் ரூ. 500 நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    வெங்கடேசனின் தந்தை சுப்பிரமணி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இவர் புனேயில் பணிபுரிந்த போது அங்கேயே தங்கி விட்டார். இதனால் அவரின் குடும்பம் புனேக்கு குடிபெயர்ந்தது. 24 வருடங்களுக்கு முன்பு வெங்கடேசன் சிறு சிறு வேலைகள் செய்து வந்தார். இதில் போதிய வருமானம் கிடைக்காததால் அங்குள்ள திருட்டு கும்பலிடம் பழக்கம் ஏற்பட்டது. அதிலிருந்து அவரின் நடவடிக்கைகள் மாறிவிட்டன.

    20 வருடங்களுக்கு முன்பு வெங்கடேசன் கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் வேலையில் இறங்கினார். அங்குள்ள ஒரு நபர் போலீசிடம் ரகசிய தகவல் கொடுத்ததையடுத்து வெங்கடேசன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து அவரை கொலை செய்தனர்.

    இந்த வழக்கில் வெங்கடேசன் 20 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார் என்று புனே நகர போலீஸ் துணை சூப்பிரண்டு டெங்காலி தெரிவித்தார். போலீசார் வெங்கடேசனை ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புனேவுக்கு அழைத்து சென்றனர்.

    Next Story
    ×