search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் - அன்புமணி அறிக்கை
    X

    தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் - அன்புமணி அறிக்கை

    தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழர் திருநாளாம் தைத்திருநாளையொட்டி மதுரை மாவட்டத்தில் தொடங்கி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை வெகு சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

    ஜல்லிக்கட்டு மட்டுமின்றி, மஞ்சு விரட்டு, எருதுவிடும் விழா, சேவல் சண்டை, ரேக்ளா போட்டி ஆகியவற்றையும் மாவட்டத்தின் எந்த பகுதியிலும் நடத்தக்கூடாது என்றும், இதை மீறி எவரேனும் போட்டிகளை நடத்தினால் அவர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

    திருவிழாக்கள் என்ற பெயரில் கூட இத்தகைய நிகழ்வுகளை நடத்தக்கூடாது என்றும் ஆட்சியர் கடுமை காட்டியுள்ளார்.

    தருமபுரி மாவட்டத்தில் எந்த இடத்திலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை; அதனால் தான் போட்டிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய காரணங்களை ஏற்க முடியாது.

    ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பில் தருமபுரி மாவட்டத்தின் பெயர் இடம்பெறவில்லை என்பது உண்மை தான். இது அறியாமல் நடத்தத் தவறா அல்லது திட்டமிட்டு இழைக்கப்படும் துரோகமா? என்பது தெரியவில்லை.

    போராடிப் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் உரிமையை தருமபுரி மாவட்டத்தில் மட்டும் பயன்படுத்த தமிழக அரசு தடை போடுவதன் நோக்கம் புரியவில்லை.

    தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு தடை விதிக்க நியாயமான காரணங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மதுரை மாவட்டம் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் போன்ற இடங்களில் நடக்கும் அளவுக்கு பிரமாண்டமாக தருமபுரி மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதில்லை.

    ஆனாலும், கோவில் திருவிழாக்களின் ஓர் அங்கமாகவும், உள்ளூர் அளவிலான சிறிய போட்டிகள் வடிவத்திலும் மிக அதிக எண்ணிக்கையில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருது விடும் போட்டிகள் நடத்தப்படும்.

    அவற்றைத் தடை செய்வது திருவிழாக்களுக்கு உரிய உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் பறித்து விடும். எனவே, தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×