search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    21-ந்தேதி தொடக்கம்: அரசு கல்வி தொலைக்காட்சியில் 24 மணிநேர நிகழ்ச்சி
    X

    21-ந்தேதி தொடக்கம்: அரசு கல்வி தொலைக்காட்சியில் 24 மணிநேர நிகழ்ச்சி

    தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் கல்வி தொலைக்காட்சி புதிதாக தொடங்கப்படுகிறது. இதன் ஒளிபரப்பு வருகிற 21-ந்தேதி முதல் தொடங்குகிறது. #EducationTVChannel
    சென்னை:

    தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் கல்வி தொலைக்காட்சி புதிதாக தொடங்கப்படுகிறது.

    இதன் ஒளிபரப்பு வருகிற 21-ந்தேதி முதல் தொடங்குகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின் பேரில் முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் மேற்பார்வையில் இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையிலான குழுவினர் தொலைக்காட்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    கல்வி தொலைக்காட்சிக்கான ஸ்டூடியோ சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நவீன வகை கேமராக்கள், படப்பிடிப்பு கருவிகள், ஆளில்லா விமானம் ஆகியவற்றுடன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. 15-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    கல்வித்துறையின் செயல்பாடுகள், மானியங்கள், நலத்திட்ட உதவிகள், பாடத்திட்டங்கள் குறித்து விளக்கும் புதிய முறைகள், கல்வித்துறையில் சிறப்பாக திறன்களை வெளிப்படுத்தி வரும் ஆசிரியர்களை பற்றிய நிகழ்ச்சிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

    அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு கிடைக்கும் உதவிகள், இதன்மூலம் அவர்கள் கல்வி கற்கும் திறன் போன்றவற்றை கல்வி தொலைக்காட்சி தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தும். ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படித்து சாதனையாளர்களாக வருவது குறித்து தகவல்கள் திரட்டப்பட்டுள்ளது.

    மாணவர்களுக்கு அறநெறி குறித்த வகுப்பு, சாலை போக்குவரத்து விதிகள், விளையாட்டு பயிற்சி, தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து திறமைகளை வளர்க்கும் வகையில் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அமையும்.

    பள்ளிகளின் பராமரிப்பு, சிறந்த உள்கட்டமைப்பு உள்ள பள்ளிகள், அரசு பள்ளிகளில் ஜொலிக்கும் ஆசிரியர்கள், மாணவர்களை கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வி தொலைக்காட்சி தமிழக அரசின் கேபிள் டி.வி.யில் 200-ம் இடத்தில் இடம் பிடித்துள்ளது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதனை திறந்து வைக்கிறார். #EducationTVChannel
    Next Story
    ×