search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் விரைவில் அம்மா திரையரங்கம்- அமைச்சர் கடம்பூர் ராஜூ
    X

    தமிழகம் முழுவதும் விரைவில் அம்மா திரையரங்கம்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

    தமிழகம் முழுவதும் அம்மா திரையரங்கம் அமைப்பது குறித்து வருகிற சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது அரசு பரிசீலிக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். #MinisterKadamburRaju
    கோவில்பட்டி:

    தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொங்கல் திரைப்படங்கள் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கவில்லை என தமிழக அரசு அறிவித்திருந்தது. சென்னையில் உள்ள ஒரு சில தியேட்டர்களில் சிறப்பு காட்சியை திரையிடவில்லை என கூறி, அதற்கான டிக்கெட் முன்பதிவு பணத்தை திரும்ப ஒப்படைத்துள்ளனர்.

    ஆனால் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது என்று வந்த தவறான தகவலால் தான் நாங்கள் சிறப்பு காட்சி திரையிட்டோம் என சில இடங்களில் கூறியுள்ளனர். இருந்தாலும் அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முதற் கட்டமாக அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனை மீறி சிறப்பு காட்சி ஒளிப்பரப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    முறைப்படி அனுமதி கேட்டால், பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு காட்சிகள் திரையிட அரசு பரிசீலனை செய்யும். அம்மா திரையரங்கம் என்பது மாநகராட்சிக்கு மட்டும் தான் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் அம்மா திரையரங்கம் அமைப்பது குறித்து வருகிற சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது அரசு பரிசீலிக்கும்.

    திரையரங்குகளில் விற்கப்படும் உணவு பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய சொல்லியுள்ளோம். வெளியிலிருந்து கொண்டு செல்லும் உணவு பொருட்களை தடை செய்யக்கூடாது என உத்தரவு வழங்கி உள்ளோம். விரைவில் இவை அனைத்துக்கும் நிரந்தர தீர்வு காணப்படும் வகையில் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

    நல்ல திட்டங்களையும் மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களையும் தடுக்கின்றனர் என்பது தான் எதிர்க்கட்சியின் வேலை என்பது மக்களுக்கு தெளிவாக தெரிந்துள்ளது.

    அ.தி.மு.க. தேர்தல் கூட்டணி தொடர்பாக தம்பிதுரை தெரிவித்தது அவரது சொந்த கருத்து. அவருக்கு அதிகாரம் இல்லை என்று சொல்வதற்கு, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் அதிகாரம் இல்லை. வருகிற 20-ந் தேதி எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவாகவும், தேர்தல் பிரசாரத்தின் தொடக்கமாகவும் நெல்லையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் தமிழக முதல்வர் பங்கேற்கிறார்.

    தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டை கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. தற்போது எவ்வித கருத்தையும் தெரிவிக்க முடியாது. விசாரணை கமிசன் அறிக்கை வந்த பின்பு ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மைகள் வெளிவரும்.

    இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #MinisterKadamburRaju
    Next Story
    ×