search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் தேர்தல் ரத்து வரவேற்கத்தக்கது - திருமாவளவன்
    X

    திருவாரூர் தேர்தல் ரத்து வரவேற்கத்தக்கது - திருமாவளவன்

    திருவாரூர் தேர்தல் ரத்து வரவேற்கத்தக்கது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #ThiruvarurByElection

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியத் தேர்தல் ஆணையம் திருவாரூரில் இடைத்தேர்தலை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். தேர்தல் ஆணையம் தனது நம்பகத்தன்மையை மீட்பதற்கான நடவடிக்கைகளை இனிமேலாவது மேற் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    தமிழ்நாட்டில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவேண்டிய சூழலில் திருவாரூருக்கு மட்டும் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது எல்லோரிடத்திலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. 2016 பொதுத் தேர்தலின்போதும், ஆர்கே நகர் இடைத்தேர்தல் நேரத்திலும் ஆளும் கட்சியின் சார்பில் வாக்காளர்களுக்குப் பெருமளவில் பணம் கொடுக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

    ஆனால் தேர்தல் ஆணையம் அதில் உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்க வில்லை. அது ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற புகார்கள் எழுந்தன. பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. வருமான வரித்துறை அளித்த தகவலும் கூட மாநில அரசால் உதாசீனப் படுத்தப்பட்டது. இந்தச் சூழலில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக காலியாக இருக்கும் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும், அது போலவே திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்ற எதிர் பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது.

    5 மாநிலங்களில் சட்ட சபைத் தேர்தல் நடந்தபோதே இந்த இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பருவ நிலையைக் காரணம் காட்டி இங்கு இடைத்தேர்தல் நடத்த உகந்த சூழல் இல்லை என்று தலைமைச் செயலாளர் கூறியிருப்பதாகவும், எனவே தேர்தல் பின்னர் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மழை பெய்யாத நேரத்தில் பருவநிலையைக் காரணம் காட்டித் தேர்தலை ஒத்தி வைத்த ஆணையம் தற்போது கஜா புயல் பாதிப்பில் இருந்து திருவாரூர் வாக்காளர்கள் விடுபடாத நிலையில், அங்கு புயல் நிவாரணப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் அங்கு மட்டும் இடைத்தேர்தலை அறிவித்தது எல்லோருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    திருவாரூரில் மட்டும் தேர்தல் நடத்துவதற்குக் காரணம் என்ன? மற்ற 19 தொகுதிகளில் ஏன் தேர்தல் நடத்தப்படவில்லை? என்பதைத் தேர்தல் ஆணையம் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. 'தேர்தல் அறிவிப்பு உள்நோக்கம் கொண்டதாக உள்ளது’ என்ற குற்றச்சாட்டு அதனால்தான் எழுந்தது.

    இந்தச் சூழலில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடுக்கப்பட்டன. அந்த வழக்குகள் நாளை விசாரணைக்கு வர இருந்த நிலையில் தேர்தல் ஆணையமே முன்வந்து திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்திருப்பதை வர வேற்கிறோம்.

    தமிழ்நாட்டு மக்களிடையே கேள்விக்குள்ளாகி இருக்கும் தனது நம்பகத்தன்மையை மீட்பதற்கான நடவடிக்கைகளை இனிமேலாவது தேர்தல் ஆணையம் எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எந்தவித முறைகேடுகளும் இல்லாமல் பாராளுமன்றத் தேர்தலோடு சேர்த்து இந்த இருபது தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தும் என்றும் நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ThiruvarurByElection

    Next Story
    ×