search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றியதை கண்டித்து திமுக மருத்துவ அணி ஆர்ப்பாட்டம்
    X

    கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றியதை கண்டித்து திமுக மருத்துவ அணி ஆர்ப்பாட்டம்

    சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றியதை கண்டித்து தி.மு.க. மருத்துவ அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    சென்னை:

    சிவகாசி அரசு மருத்துவமனையில் ஏழை கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதை கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் தி.மு.க. மருத்துவ அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு மருத்துவ அணி மாநில தலைவர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். மருத்துவ அணி செயலாளர் டாக்டர் கனிமொழி, தாயகம் கவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது. பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதற்கு பொறுப்பு ஏற்று சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி கண்டன கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ அணி மாநில தலைவர் டாக்டர் பூங்கோதை பேசியதாவது:-

    சிவகாசி அரசு மருத்துவமனையில் சாத்தூரை சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சுகாதாரத்துறையின் பொறுப்பற்ற செயல்களால் தான் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளது.

    கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதற்கு பொறுப்பு ஏற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியால் மக்கள் பல்வேறு அவதிப்பட்டு வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நிர்வாகத்திறன் அற்ற ஆட்சியாக செயல்படுகிறது. விரைவில் தி.மு.க. ஆட்சி உருவாகும். மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி தமிழகத்துக்கு கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×