search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி அவினாசிசாலையில் நள்ளிரவில் ஏராளமான இளைஞர்கள் கார்,மோட்டார் சைக்கிளில் திரண்டனர்
    X
    புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி அவினாசிசாலையில் நள்ளிரவில் ஏராளமான இளைஞர்கள் கார்,மோட்டார் சைக்கிளில் திரண்டனர்

    கோவையில் புத்தாண்டு கொண்டாட்டம்- விபத்தில் சிக்கி 4 வாலிபர்கள் பலி

    கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 3 இடங்களில் நடந்த விபத்துகளில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். விபத்துகள் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேற்று இரவு 8 மணி முதலே களை கட்டியது.

    இரவு 12 மணி அளவில் மாநகர சாலைகளில் ஏராளமான வாலிபர்கள் இருசக்கர வாகனங்களை வேகமாக ஓட்டி புத்தாண்டை வரவேற்றனர். நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களை வேகமாக இயக்கியதால் பல்வேறு இடங்களில் விபத்து ஏற்பட்டது.

    3 இடங்களில் நடந்த விபத்துகளில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். இது குறித்த விவரம் வருமாறு:-

    கோவை காந்திபார்க் தடாகம் ரோடு பகுதியை சேர்ந்தவர் நியாஸ் (வயது 19). இவரும், இவரது நண்பரான வேலாண்டிபாளையத்தை சேர்ந்த தன்வீரும்(21) நேற்று இரவு நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாடினர். பின்னர் நள்ளிரவு 1 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். வேலாண்டிபாளையம் அருகே வந்த போது எதிரே கோவில்மேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (21) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். கண்இமைக்கும் நேரத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதின. இதில் தூக்கி வீசப்பட்டு 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    பொதுமக்கள் 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே மணிகண்டன் இறந்தார். நியாஸ் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். தன்வீர் படுகாயத்துடன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    குனியமுத்தூர் வசந்தம் நகரை சேர்ந்தவர் மாதவன் (15). நேற்று இரவு நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாடிய இவர் அதிகாலை 2 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

    உக்கடம் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார்.

    ரத்தினபுரி மருதாசலம் வீதியை சேர்ந்தவர் பிஜூ(18). போத்தனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு 8 மணி அளவில் இவர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

    போத்தனூர் ரோட்டில் வந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பிஜூவை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பிஜூ பரிதாபமாக இறந்தார்.

    இதுதவிர கோவை நகரின் பல்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் 20 பேர் கை, கால் முறிந்து காயம் அடைந்தனர். அவர்களுக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்துகள் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×