search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    20 தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடும்- அன்புமணி ராமதாஸ் பேச்சு
    X

    20 தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடும்- அன்புமணி ராமதாஸ் பேச்சு

    20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடுவோம் என்று கோவையில் நடந்த பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார். #anbumani #pmk #byelection

    கோவை:

    பா.ம.க. செயற்குழு கூட்டம் கோவை சிங்காநல்லூரில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் கட்சி வளர்ச்சி குறித்து பேசினார். தேர்தல் கூட்டணி தொடர்பாக இன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

    கூட்டத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது-

    2018-ம் ஆண்டு முடிந்து 2019-ம் ஆண்டு தொடங்க போகிறது. கடந்த ஆண்டில் பா.ம.க. மக்கள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியது.

    கட்சியில் 60 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். தமிழ் நாட்டில் நீர் நிலைகளை பாதுகாக்க பா.ம.க. தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

    பா.ம.க. தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது. பொதுமக்கள், விவசாயிகள் என்று அனைத்து தரப்பு மக்களுக்காகவும் இந்த கட்சி வெறும் போராட்டங்களை மட்டும் நடத்தாமல் மக்களின் வாழ்வாதாரங்களை முன்னேற்ற பாடுபட்டு வருகிறது. அதற்கான திட்டங்களை தயாரித்து கொடுக்கிறோம். வரும் ஆண்டு தேர்தல் ஆண்டாகும். நாடாளுமன்ற தேர்தல் குறித்து மட்டுமே பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் 20 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத் தேர்தல் குறித்து பலர் மறந்து போய் விட்டனர்.

    20 சட்ட மன்ற தொகுதி இடைத் தேர்தல் மூலம் தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட போகிறது. இந்த தேர்தல் முக்கிய தேர்தலாகும்.

    கடந்த 2010-ம் ஆண்டுக்கு பின்னர் இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. ஆனால் இப்போது 20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடுவோம்.

    20 தொகுதிகளில் பெரம்பூர், பூந்தமல்லி, செங்கல்பட்டு, சோளிங்கர், குடியாத்தம், பாப்பிரெட்டிப்பட்டி, திருப்போரூர், அரூர், நிலக்கோட்டை, ஆம்பூர், தஞ்சாவூர் ஆகிய 11 தொகுதிகளில் வெற்றியை நாங்கள் தீர்மானிப்போம்.

    நாங்கள் யாருடன் கூட்டணி அமைப்போம் என்பதை விட எங்களுடன் யார் சேருவார்கள் என்பது தான் முக்கியம். எங்கள் கட்சிக்கு மக்கள் அங்கீகாரம் அளித்து விட்டனர். மக்களின் நம்பிக்கையை ஓட்டாக மாற்றி காண்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #anbumani #pmk #byelection

    Next Story
    ×