search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏடிஎம் கொள்ளையில் வங்கி ஊழியர் உடந்தையா? கைதான பெண்ணிடம் போலீஸ் விசாரணை
    X

    ஏடிஎம் கொள்ளையில் வங்கி ஊழியர் உடந்தையா? கைதான பெண்ணிடம் போலீஸ் விசாரணை

    புதுவையில் நடந்த ஏ.டி.எம். கொள்ளையில் வங்கி ஊழியர் உடந்தையா? என்று கைதான பெண்ணிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மறைமலை அடிகள் சாலையில் புதிய பஸ் நிலையம் எதிரே ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணியளவில் இந்த ஏடி.எம். மையத்தில் ஒரு இளம்பெண் நுழைந்தார்.

    அந்த பெண் முறை கேட்டில் ஈடுபட்டு பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக மும்பையில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் வந்தது. இதையடுத்து புதுவை வங்கி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

    மேலும் அருகில் உள்ள உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனே வங்கி அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    ஆனால், அதற்குள் அந்த பெண் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணத்தை கொள்ளயடித்து விட்டு தப்பி சென்று விட்டார். மொத்தம் ரூ.5 லட்சத்து 8 ஆயிரத்து 700 கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து உருளையன்பேட்டை போலீசார் அங்கு சென்று கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது பணத்தை கொள்ளையடித்து சென்ற பெண்ணை அடையாளம் கண்டனர்.

    இதையடுத்து புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை வெளியூருக்கு தப்பி செல்ல முயன்ற அந்த பெண்ணை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர் பெங்களூரை சேர்ந்த சித்ரா என்ற ஏஞ்சல் (வயது 28) என்பதும், கணவரை விட்டு பிரிந்த இவர் புதுவை கரியமாணிக்கம் பூந்தோட்டம் பகுதியில் தங்கி எய்ட்ஸ் நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தன்னார்வலராக இருந்து வந்தது தெரிய வந்தது.

    மேலும் ஏ.டி.எம். மையத்தில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசாரிடம் சித்ரா கூறியதாவது:-

    சம்பவத்தன்று ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்த போது ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைக்கும் கதவு திறந்து இருந்ததால் பணத்தை எடுக்க சென்றதாக தெரிவித்தார்.

    ஆனால், அவரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 98 ஆயிரத்து 120-ஐ மட்டுமே போலீசார் கைப்பற்றினர். மீதி பணம் எங்கே? என கேட்ட போது, செலவு செய்து விட்டதாக சித்ரா தெரிவித்தார்.

    இதற்கிடையே நள்ளிரவு 11 மணிக்கு கரியமாணிக்கத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு சித்ரா வர காரணம் என்ன? மேலும் ஒரே நாள் நள்ளிரவில் ரூ. 1 லட்சம் ரூபாயை செலவு செய்ததாக சித்ரா கூறியது போன்றவற்றால் போலீசாருக்கு சித்ரா மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இந்த கொள்ளையில் அந்த வங்கியை சேர்ந்த பணம் நிரப்பும் ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதையடுத்து அந்த வங்கியில் பணம் நிரப்பும் ஊழியர்கள் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×