search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக அரசை கண்டித்து மேகதாதுவில் 3-ந்தேதி முற்றுகையிடும் போராட்டம் - பி.ஆர்.பாண்டியன்
    X

    கர்நாடக அரசை கண்டித்து மேகதாதுவில் 3-ந்தேதி முற்றுகையிடும் போராட்டம் - பி.ஆர்.பாண்டியன்

    கர்நாடக அரசை கண்டித்து ஓசூரில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மேகதாதுவை முற்றுகையிடும் போராட்டத்தை 3-ந் தேதி நடத்த திட்டமிட்டுள்ளதாக பி.ஆர்.பாண்டியன் கூறினார். #MekedatuDam
    தஞ்சாவூர்:

    தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 மாவட்டங்களில் 79 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்ததாக 41 லட்சத்து 33 ஆயிரத்து 878 மரங்கள் சாய்ந்துள்ளதாக அரசு தரப்பில் அறிவித்துள்ளனர். கணக்கெடுப்பை குறைந்து காண்பிக்கும்படி கிராம நிர்வாக அலுவலர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.500 மட்டுமே நிவாரணமாக வழங்கப்படுகிறது.

    அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது. கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    கர்நாடக அரசு திட்டமிட்டு தமிழகத்தை பாலைவனமாக்க நினைக்கிறது. மேகதாதுவில் அணை கட்டுவது மின்சாரம் தயாரிக்க என்றும், கடலில் வீணாகும் தண்ணீரை அணையில் சேமித்து அந்த தண்ணீர் முழுவதும் தமிழகத்திற்கு தான் வழங்கப்படும் என்றும் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறியிருப்பது ஏமாற்று வேலையாகும்.

    மின்சாரம் தயாரிப்பதற்கு தான் என கூறுவது உண்மையானால் ராசிமணலில் அணை கட்ட வேண்டும். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது. அதற்கு பதிலாக ராசிமணலில் அணை கட்ட வேண்டும் என்று 1997-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் தேவேகவுடாவிடம் அன்றைக்கு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி வலியுறுத்தினார்.

    ராசிமணலில் அணை கட்டப்பட்டால் அந்த அணை தமிழகத்திற்கு சொந்தமாகும். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது. ராசிமணலில் அணை கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஓசூரில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மேகதாதுவை முற்றுகையிடும் போராட்டத்தை 3-ந் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #MekedatuDam


    Next Story
    ×