search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா?- அதிகாரியை கண்டித்த கமல்ஹாசன்
    X

    வீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா?- அதிகாரியை கண்டித்த கமல்ஹாசன்

    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் வீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா? என்று அரசு அதிகாரியை கமல்ஹாசன் கண்டித்துள்ளார். #GajaCyclone #KamalHaasan
    திண்டுக்கல்:

    தமிழகத்தை கடந்த மாதம் 16-ந்தேதி புரட்டிப்போட்ட கஜா புயல் கொடைக்கானலில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

    இங்குள்ள மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்களில் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததுடன் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால் விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கேரட், வெள்ளைப்பூண்டு, உருளை கிழங்கு செடிகளை நாசம் செய்தது.

    மீட்பு பணிகள் முடிவடைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வந்த நிலையில் மக்கள் நீதிமய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் நேற்று புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பெரும்பாறை, மலையக்காடு, கோரங்கொம்பு, கே.சி.பட்டி, குரவனாச்சி ஓடை, பாச்சலூர், குரங்கணிப்பாறை, கடைசிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளையும், ஆதிவாசி மக்களையும் சந்தித்து குறைகள் கேட்டார்.

    அப்போது மலை கிராம மக்களிடம் அரசின் நிவாரண உதவிகள் கிடைத்துள்ளதா? என கேட்டார். அதற்கு அப்பகுதி மக்கள் அரசு திட்டத்தில் வீடு கட்டுவதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து சம்மந்தப்பட்ட ஊராட்சி அலுவலரின் பெயர் மற்றும் அவரது செல்போன் எண் குறித்த விவரங்களை கேட்டார்.

    அந்த எண்ணுக்கு தானே போன் செய்து பேசினார். அப்போது அரசு திட்டத்தில் வீடு கட்ட ரூ.1.80 லட்சம் வழங்கப்படுகிறது. அதற்கு முன் பணமாக ரூ.50 ஆயிரம் பணம் எதுவும் கொடுக்க வேண்டுமா? என கேட்டார். அதற்கு அந்த அதிகாரி அப்படி யாருக்கும் பணம் தரத்தேவையில்லை என்றார். பிறகு எதற்காக அப்பாவி மக்களிடம் பணம் கேட்கிறீர்கள்?

    யாரும் பணம் கேட்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். நாங்களும் கண்காணித்து வருகிறோம் என்றார். இதனையடுத்து கிராம மக்களிடம் வீடு கட்ட நீங்கள் யாருக்கும் பணம் தரத்தேவையில்லை. யாரேனும் பணம் கேட்டால் எங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களிடம் கூறுங்கள் என்றார்.

    இதனையடுத்து புயலால் பாதிக்கப்பட்ட மலை கிராம மக்களுக்கு கம்பளி, ஸ்வெட்டர், தார்ப்பாய், அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண உதவியை வழங்கினார். அதன் பின்னர் நிருபர்களிடம் கூறுகையில்,

    புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் முழுமையாக நிவாரணம் கிடைக்கவில்லை. புயல் பாதித்த கிராமத்தை தத்தெடுக்கும் எண்ணம் எதுவும் இல்லை. முதலில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் முயற்சியில் நாங்கள் இறங்கி உள்ளோம். புயல் பாதிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரை அதிகாரிகள் யாரும் இங்கு வரவில்லை.



    இனிமேலாவது பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்றார்.

    பின்னர் திண்டுக்கல்லில் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை மத்திய அரசிடம் பயந்து கேட்காமல் தமிழக அரசு அழுத்தம் கொடுத்து கேட்க வேண்டும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பில் அரசியல் பின்னணி உள்ளது. இது ஒரு கண்துடைப்பு நாடகம். ஸ்டெர்லைட் வேண்டாம் என்பது நோக்கமல்ல. மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு இல்லாத இடத்தில் நடத்த வேண்டும். மக்களுக்காக செயல்படக்கூடிய அரசாக தமிழக அரசு இருக்க வேண்டும்.

    ஆனால் தற்போது தமிழக அரசு சுயநலமாக செயல்பட்டு வருகிறது. அப்படி இருக்கக்கூடாது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்கள் அதிக முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை. அவர்களது வாழ்க்கை இன்னும் தாழ்வான நிலையிலேயே உள்ளது. அதிக இடங்கள் சேதம் அடைந்துள்ளன.

    நிவாரணப் பணிகள் துரிதமாக நடந்து வந்தாலும் தமிழக அரசு இன்னும் வேகம் காட்டவில்லை. இந்தியாவில் வரி செலுத்துவதில் தமிழகம் 2-வது மாநிலமாக உள்ளது.

    ஆனால் மத்திய அரசு தமிழகத்தை வியாபாரத் தளமாக மட்டுமே பார்க்கிறது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் காட்டும் ஆர்வத்தை கஜாபுயல் பாதிப்பில் காட்ட தவறி வருகின்றனர்.

    எனவே தமிழகத்திற்கு நிவாரணத் தொகையை கூடுதலாக வழங்க வேண்டும். எங்களைப் பொருத்தவரை அரசியலில் ஊழலை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் போராடி வருகிறோம்.

    டெல்லியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சந்தித்தது அவர்களை நெருங்கியதாக அர்த்தம் அல்ல. அரசியல் மற்றும் தேர்தல் நிலைப்பாடு பற்றி நாங்கள் பின்னர் முடிவு செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #KamalHaasan
    Next Story
    ×