search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒய் வடிவில் கட்டப்பட்ட நாகர்கோவில் பாலத்தை 75 ஆயிரம் பேர் பார்த்தனர்
    X

    ஒய் வடிவில் கட்டப்பட்ட நாகர்கோவில் பாலத்தை 75 ஆயிரம் பேர் பார்த்தனர்

    ரூ.128 கோடி செலவில் ஒய் வடிவில் கட்டப்பட்ட நாகர்கோவில் பாலத்தை 75 ஆயிரம் பேர் பார்த்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலை அடுத்த பார்வதிபுரத்தில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்ததையடுத்து அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொண்டார்.

    ரூ.128 கோடி செலவில் ஒய் வடிவில் சுமார் 1½ கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பாலம் அமைக்கப்பட்டது. பால வேலைகள் முடிந்ததை அடுத்து பாலத்தை பொதுமக்கள் நடந்து சென்று பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    நேற்று மாலை 4 மணிக்கு பொதுமக்கள் பார்வைக்காக பாலம் திறந்து விடப்பட்டது. மின்விளக்கு அலங்காரத்தால் பாலம் ஜொலித்தது. பாலத்தை பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வந்து பார்த்து ரசித்தனர்.பாலத்தை பார்த்து ரசிப்பதற்கு நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமானது. சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் உள்ள பாலம் முழுவதும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    பாலத்தின் இருபுறங்களில் உள்ள சாலைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. கரகாட்டம், மயிலாட்டம், நடனம், செண்டை மேளம், பாட்டு கச்சேரி என பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்தன. இது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. பாலத்தை பார்வையிட வந்தவர்களுக்கு இனிப்பு வகைகளும், பழ வகைகளும், குளிர்பானங்களும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

    பெண்களுக்கு ரோஜாப்பூ வழங்கி வரவேற்றனர். ஒரு கட்டத்தில் கூட்டம் கட்டுக்கடங்காத அளவிற்கு அதிகமாக காணப்பட்டது.ஏராளமானோர் செல்பி எடுத்துக் கொண்டனர். இயற்கை அழகையையும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் பாலத்தை பார்வையிடுவதற்காக மாலை 5.30 மணிக்கு வருகை தந்தார். அவர் பொதுமக்களுடன் நடந்தே சென்று பாலத்தை பார்வையிட்டார். இரவு 9.30 மணி வரை பொன். ராதாகிருஷ்ணன் பாலத்திலேயே நின்று பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

    தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஏ. அசோகன், பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் முத்து கிருஷ்ணன், முன்னாள் நகரசபை தலைவர் மீனாதேவ் உள்பட ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்களும் பாலத்தை பார்வையிட்டனர்.

    இந்த பாலத்தில் வருகிற 19-ந்தேதி முதல் பரிச்சாத்த முறையில் பஸ் மற்றும் வாகனங்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பஸ் போக்குவரத்து தொடங்கும் பட்சத்தில் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணப்படும்.

    பாலத்தை பொதுமக்கள் பார்வையிட்டது குறித்து பாரதிய ஜனதா நிர்வாகி ஒருவர் கூறுகையில், மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனின் முயற்சியால் மார்த்தாண்டம், பார்வதிபுரத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது. பார்வதிபுரம் பாலத்தை ரசிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பெண்கள் மற்றும் குடும்பத்தோடு பலரும் வருகை தந்துள்ளனர். பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட 4 மணி நேரத்தில் சுமார் 75 ஆயிரம் பேர் பாலத்தை ரசித்துள்ளனர் என்றார்.

    Next Story
    ×